மாவட்ட செய்திகள்

கர்நாடகாவில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மேட்டூர் அணை நிரம்புமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு + "||" + Reduction of water opening in Karnataka: Mettur Dam filled? Farmers expectation

கர்நாடகாவில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மேட்டூர் அணை நிரம்புமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

கர்நாடகாவில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மேட்டூர் அணை நிரம்புமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
கர்நாடகாவில் தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணை நிரம்புமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மேட்டூர்,

காவிரி டெல்டா பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேட்டூர் அணை கட்டப்பட்டது. அணையின் மூலம் டெல்டா மாவட்டங்களான 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 120 அடி உயரம் நீர்சேமிப்பு கொண்ட மேட்டூர் அணையின் தண்ணீர் கொள்ளளவு 93.45 டி.எம்.சி. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) ஆகும்.


கடந்த சில வாரங்களாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதன் காரணமாக அங்கிருந்து வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு வந்தது.

111.16 அடியாக உயர்ந்தது

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து 100 அடியை தாண்டியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நீர்வரத்து குறைந்தது. அதாவது கடந்த 13-ந் தேதி வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

இந்த நிலையில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதே போல நேற்று முன்தினம் 108.40 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 111.16 அடியாக உயர்ந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி பாய்ந்தோடுகிறது.

அணை நிரம்புமா?

மேலும் அணையின் மொத்த நீர் கொள்ளளவு 80 டி.எம்.சி. ஆக அதிகரித்துள்ளது. அணையின் தனது முழுகொள்ளளவை எட்ட 13 டி.எம்..சி. தண்ணீர் தேவைப்படுகிறது. இதனிடையே கர்நாடகத்தில் மழை குறைந்ததால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையும் நிலை ஏற்பட்டது. எனவே மேட்டூர் தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்புமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒகேனக்கல்

இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. இந்தநிலையில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இதனிடையே காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. நேற்று சுதந்திர தின விழாவையொட்டி விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரை கண்டு ரசித்தனர். சிலர் காவிரி கரையோரங்களில் குளித்தனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.