நாகையில் சுதந்திர தின விழா: 139 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


நாகையில் சுதந்திர தின விழா: 139 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 7:21 PM GMT)

நாகையில் சுதந்திர தின விழாவில் 139 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை ஜீப்பில் சென்று கலெக்டர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து 4 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர் அரசு பல்வேறுதுறைகளில் சிறப்பாக பணி புரிந்த 58 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்து 910 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகள், 10 பேருக்கு ரூ.3 ஆயிரத்து 170 மதிப்பிலான காதொலி கருவிகள், சுயதொழில் தொடங்குவதற்கு நிதி உதவியாக 20 பேருக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 160-க்கான காசோலைகளையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 4 பேருக்கு கல்வி உதவித்தொகை ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்துக்கான காசோலையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 317 மதிப்பிலான சொட்டு நீர் பாசன கருவிகளும், தாட்கோ நிறுவனம் மூலம் 15 பேருக்கு ரூ.61 லட்சத்து 52 ஆயிரத்து 93 நிதி உதவியும், கூட்டுறவுத்துறை சார்பில் 6 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் மத்திய கால கடனாக ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் வங்கி கடன் உதவியும், சமூக நலத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தைகளின் பெற்றோர் 10 பேருக்கு ரூ.5 லட்சத்துக்கான வைப்பு தொகை ரசீது, வேளாண்மை துறை சார்பில் 11 பேருக்கு ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 640 மதிப்பில் வேளாண் உபகரணங்கள், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.14 லட்சம் கடன் உதவிகள் மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 32 லட்சத்து 78 ஆயிரத்து 346 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

கலைநிகழ்ச்சிகள்

விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தியாகராஜன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ராஜன், மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் கலாநிதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பத்ரிநாத் உள்பட அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story