மாவட்ட செய்திகள்

இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டு வருவது மோடியின் கனவு தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு + "||" + Modi's dream is to bring down the chancellor's rule in India

இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டு வருவது மோடியின் கனவு தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டு வருவது மோடியின் கனவு தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டு வருவது மோடியின் கனவு என தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
தஞ்சாவூர்,

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு தொடக்கவிழா தஞ்சையில் நேற்றுமாலை நடைபெற்றது. விழாவிற்கு மாநில தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் ராஜூமுருகன் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவஞானம், தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார். மாநாட்டை சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சந்துரு தொடங்கி வைத்து பேசினார்.


இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று நாம் குரல் கொடுக்கும் அதே வேளையில் சாதியை ஏன்? ஒழிக்க வேண்டும் என சிலர் பேசுகின்றனர். நமது நடை, உடை, பேச்சில் மாற்றம் வந்து இருக்கிறது. ஆனால் சாதியில் மாற்றம் ஏன்? வரவில்லை. சனாதனத்தை எதிர்த்து மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். அப்போது சனாதனத்தை காக்கும் சக்திகள் நமக்கு எதிராக திரும்புவார்கள்.

பொது விவாதம்

சாதி ஒழிக என்று சொல்ல முடியாதவர்கள் சனாதன சக்திகள். சாதி பிரச்சினை பற்றி தலித் அமைப்புகள் மட்டும் பேசுவதும், போராடுவதும் இருட்டில் நடப்பது போன்றது. எனவே சாதி தொடர்பான பிரச்சினைகளை பொதுவிவாதத்துக்கு வெளிப்படையாக கொண்டு வர வேண்டும். பொது நீரோட்டத்தில் கொண்டு வரும்போது தான் தீர்வு கிடைக்கும்.

மிகப்பெரிய ஆபத்து நம்மை சூழ்ந்து இருக்கிறது. பெரும் பலத்துடன் பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்து இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்டகால திட்டத்தை நிறைவேற்ற இந்த 5 ஆண்டுகளை அவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும். ராமர் கோவில் கட்ட வேண்டும். இந்தியாவை இந்துஸ்தான் என பெயர் மாற்ற வேண்டும். இந்து மதம் மட்டும் தான் இந்திய மண்ணில் இருக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே கலாசாரம் போன்றவை தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்டகால திட்டங்களாகும்.

அதிபர் ஆட்சி

அதை நிறைவேற்றுவதற்கான சூழலை இந்த தேர்தல் உருவாக்கி கொடுத்து இருக்கிறது. அவர்களின் முதல் திட்டமான காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டனர். எந்த நேரத்தில் அதிரடியான திட்டங்களை நிறைவேற்றுவார்கள் என்று தெரியாது. முப்படைகளுக்கும் ஒரே தளபதி நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?. அவர்கள் விரும்புகிற படி படைகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள வேண்டும். ஒரே கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்ய வேண்டும் என்பது அவர் களது எண்ணம்.

அப்படியொரு நிலை ஏற்படவில்லை என்றால் அதிபர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது மோடியின் கனவு. எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம். அவர்களுக்கு எதிரானதை எல்லாம் நீர்த்து போக செய்துவிட்டனர். பலவீனத்தை எல்லாம் பலமாக மாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், மாநில செயலாளர் சாமிநாதன், பொருளாளர் செந்தில்குமார், வக்கீல் ஹென்றிடிபேன், தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் திருவள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த மாநாடு நாளை(சனிக் கிழமை) வரை நடக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை