காஷ்மீர் குறித்து ரஜினிகாந்த் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து திருச்சியில் திருமாவளவன் எம்.பி. பேட்டி


காஷ்மீர் குறித்து ரஜினிகாந்த் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து திருச்சியில் திருமாவளவன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 16 Aug 2019 4:45 AM IST (Updated: 16 Aug 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று திருமாவளவன் எம்.பி. கூறினார்.

செம்பட்டு,

பாகிஸ்தான் செய்த யுத்தத்தால் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேலோடு நடத்திய பேச்சுவார்த்தையில் ராணுவம், தகவல் தொடர்பு மற்றும் வெளிவிவகாரம் ஆகியவை தவிர, மற்ற பிரச்சினைகளில் தனி அரசியல் அமைப்பு சட்டத்தை ஜம்மு-காஷ்மீர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் நம்மோடு இணைந்து செயல்பட ஒத்துக்கொண் டார்கள். தமிழ்நாடு போன்று இணைந்திருந்து பின்னர் பிரிந்து செயல்படுவதாக கூற முடியாது. அந்த வாக்குறுதியை மீறுவது நம்பிக்கை துரோகம். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நல்லது செய்வதை போல நம்முடைய இடஒதுக்கீடு சட்டங்களை அங்கு அமல்படுத்துவதாக கூறியிருப்பது அவர்களது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாக உள்ளது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ போன்ற திட்டங்களை மத்திய அரசு எப்படி திணிக்கிறதோ? அதேபோன்று ஜம்மு-காஷ்மீர் பகுதிகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் தொழில் முதலீடு என்ற பெயரால் அறிவிப்பு செய்வதற்கு அடித்தளம் அமைத்து இருக்கிறார் மோடி. இது காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழையாகும்.

காஷ்மீர் குறித்து ரஜினிகாந்த் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. மோடி, அமித்ஷா ஆகியோரை வரவேற்பது, பாராட்டுவது நடிகர் ரஜினிகாந்தின் சொந்த விருப்பம். அவர் எதிர்த்து பேச வேண்டுமென நாம் எதிர்பார்க்க முடியாது. கடந்த காலங்களில் அவர் தொடர்ச்சியாக பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். காஷ்மீருக்கு என தனி அரசியல் சட்டம் ஏற்கனவே உண்டு. ஜம்மு-காஷ்மீர் நீங்கலாக இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்டம் தனி. ஆகவே நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டத்தை இன்னொரு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்ட காஷ்மீரில் திணிக்க நினைப்பது ஆதிக்கப் போர். இந்த வரலாற்றை மூடி மறைக்கக் கூடாது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிற வைகோ, காங்கிரசுடனான கருத்து மோதல்கள் நிறைவுக்கு வந்துள்ளது. எந்த சிக்கல்களும் ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story