நடப்பாண்டில் திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு வருவாய் அதிகரிப்பு மேலாளர் அஜய்குமார் தகவல்


நடப்பாண்டில் திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு வருவாய் அதிகரிப்பு மேலாளர் அஜய்குமார் தகவல்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:45 PM GMT (Updated: 15 Aug 2019 8:34 PM GMT)

நடப்பாண்டில் திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு வருவாய் அதிகரித்துள்ளது என்று ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் கூறினார்.

திருச்சி,

திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானத்தில் நேற்று காலை சுதந்திர தினவிழா நடந்தது. இதில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நடப்பாண்டில் (ஜூலை மாதம் வரை) 1 கோடியே 43 லட்சம் பயணிகள் கையாளப்பட்டு, கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.10 கோடியே 47 லட்சம் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்தை பொறுத்தவரையில், திருச்சி கோட்டத்தில் சரக்கு ரெயில்கள் மூலம் 40 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு, 58.24 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. பயணிகளின் வசதிக்காக பயணிகள் முன்பதிவு மையம் மேம்படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த முன்பதிவு மற்றும் பதிவு அலுவலகம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.

அகல ரெயில் பாதை

தஞ்சை ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு வசதி (எக்ஸ்லேட்டர்) செய்யப்பட்டுள்ளது. அனைத்து பயணிகள் ரெயில்களிலும் பயோ கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையே 75 கி.மீ. தொலைவு அகல ரெயில் பாதை பணிகள் கடந்த மார்ச் மாதம் முடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்-கடலூர் இடையே மின்வழித்தடத்தில் பரீட்சார்த்த முறையில் சரக்கு ரெயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தமட்டில் 29 ஆளில்லா ரெயில்வே கேட்களில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 13 ஆளில்லா ரெயில்வே கேட்கள் மூடப்பட்டுள்ளது. 7 ஆளில்லா ரெயில்வே கேட்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சுதந்திர தினவிழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மோப்பநாய்களின் சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

பொன்மலை பணிமனை

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் சுதந்திர தினவிழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. பணிமனை முதன்மை மேலாளர் பி.என்.ஜா தேசியக் கொடியை ஏற்றினார். சுதந்திர தினத்தையொட்டி திருச்சி பொன்மலையில் உள்ள ரெயில்வே சுத்திகரிப்பு நிலையத்தில் 1,500 சதுர அடியில் 100 இளைஞர்கள் மூலம் 300 மரக்கன்றுகளை நட்டு ‘மியோவாக்கி’ என்ற ஜப்பானிய முறையில் அடர் காடுகள் உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை முதன்மை மேலாளர் பி.என்.ஜா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

அடர் காடுகள் மூலம் எளிதில் ஆக்சிஜன் கிடைக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்காகவும் இந்த திட்டம் ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான நீர் ரெயில்வே பணிமனையில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பணிமனை ஊழியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Next Story