ஊட்டியில் சுதந்திர தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றினார் - மழை வெள்ள பாதிப்பால் கலை நிகழ்ச்சிகள் ரத்து


ஊட்டியில் சுதந்திர தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றினார் - மழை வெள்ள பாதிப்பால் கலை நிகழ்ச்சிகள் ரத்து
x
தினத்தந்தி 15 Aug 2019 9:30 PM GMT (Updated: 15 Aug 2019 9:02 PM GMT)

ஊட்டியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றினார். மழை வெள்ள பாதிப்பால் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து கலெக்டர் போலீஸ் வாகனத்தில் மைதானத்தை வலம் வந்து, போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் அவருடன் இருந்தார். அதனை தொடர்ந்து ஆயுதப்படை போலீசார் பேண்டு வாத்தியம் முழங்க வரிசையாக அணிவகுத்து வந்தார்கள்.

தொடர்ந்து ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, இந்திய செஞ்சிலுவை சங்க மாணவ-மாணவிகள் அணிவகுத்தபடி வந்தனர். இந்த அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட பேரிடர் பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, மாவட்ட வன அதிகாரி குருசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் லோகநாதன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி, நகராட்சி, பேரிடர் மேலாண்மைத்துறை, முன்னாள் ராணுவத்தினர் நல அலுவலகம், தீயணைப்புத்துறை, தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம், வட்டார போக்குவரத்து கழகம் ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்களை பாராட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேடயங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மலைப்பிரதேசமான நீலகிரியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இரவு, பகல் என பாராமல் அனைத்துத்துறை அதிகாரிகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். 15 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் 50 முகாம்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் நிவாரணம் வழங்கப்பட்டது. நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகளில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்து, வாகனங்கள் செல்லும் வகையில் சோதனையில் இருந்து மீட்ட அதிகாரிகளுக்கு உளமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதால், சுதந்திர தின விழா மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவின் போது பழங்குடியின மக்களான தோடர், கோத்தர், இருளர் இன மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். மழை வெள்ள பாதிப்பால் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வில்லை. விழாவில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட அலுவலர் அமர் குஷ்வாஹா, ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏ.டி.சி. சுதந்திர நினைவு திடலில் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் நாராயணன், பொறியாளர் ரவி, சுகாதார அலுவலர் டாக்டர் முரளி சங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முதுமலையில் நேற்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் வனத்துறை ஊழியர்கள், வேட்டைதடுப்பு காவலர்கள், யானை பாகன்கள், உதவி பாகன்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் பொம்மன், விஜய், கிரி, கிருஷ்ணா, ரகு, மூர்த்தி, மசினி, சீனிவாசன் ஆகிய 8 வளர்ப்பு யானைகளும் பங்கேற்றன. இந்த விழாவில் வனத்துறையினர் முன்வரிசையில் நிற்க அவர்களின் பின்புறம் வளர்ப்பு யானைகள் வரிசையாக நிறுத்தி வைக்கபட்டிருந்தன. காலை 9 மணியளவில் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் செண்பக பிரியா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். அப்போது வரிசையாக நின்றிருந்த வளர்ப்பு யானைகளும் துதிக்கையை உயர்த்தி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தின. இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய கார்குடி வனச்சரகர் சிவக்குமார், முதுமலை வனச்சரகர் தயாநந்தன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் கார்குடி பள்ளியில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த ஆதிவாசி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து வனச்சரக ஊழியர்களுக்கு இடையே கயிறு இழுக்கும் போட்டி நடத்தப்பட்டது. அதில் முதுமலை வனச்சரக ஊழியர்கள் வெற்றி பெற்றனர். இந்த வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாம் வனவர் முத்துராமலிங்கம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர். இதேபோன்று முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியில் உள்ள மசினகுடி, சீகூர், சிங்காரா வனத்துறையினரும் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். இதில் மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் மற்றும் வனவர் சித்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சங்கீதா ராணி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அய்யப்பன் தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் நடுவட்டம், தேவர்சோலை பேரூராட்சி அலுவலகங்களிலும் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டது.

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கூடலூர் நந்தட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு தலைமை ஆசிரியை ஸ்ரீஜிட்டா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தேவாலா அட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை (பொறுப்பு) விஜயா தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜா தேசியக்கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

பெண்ணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முருகேசன் தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்பிரமணி உள்பட மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர். கூடலூர் வணிகர் சங்க அலுவலக வளாகத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது. வணிகர் சங்க தலைவர் பிரதாபன் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் ரசாக், அமர்கான் உள்பட நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தில் எழுத்தர் அசோக்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

விழாவில் நியூகோப் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Next Story