தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார்


தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார்
x
தினத்தந்தி 15 Aug 2019 9:30 PM GMT (Updated: 15 Aug 2019 9:03 PM GMT)

தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

தூத்துக்குடி,

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்துக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி 9.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு பாரத் உள்பட போலீசார் 35 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கினார்.

விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்துக்கும், முதியோர் உதவி தொகையாக ரூ.10 ஆயிரமும், கூட்டுறவு துறை சார்பில் ரூ.46 லட்சத்து 75 ஆயிரத்துக்கும், வேளாண்மை துறை சார்பில் ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 894-க்கும், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ரூ.13 ஆயிரத்துக்கும், மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.14 ஆயிரத்து 099-க்கும், மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.5 லட்சத்து 98 ஆயிரத்துக்கும், மகளிர் திட்டம் மூலம் ரூ.1 கோடியே 39 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 333-க்கும் என மொத்தம் 42 பேருக்கு ரூ.1 கோடியே 98 லட்சத்து 54 ஆயிரத்து 326-க்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி கல்வி மாவட் டத்தில் உள்ள அரசு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளி, எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற் றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாயர்புரம் தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிக்கூட மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந் தது.

விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், உதவி கலெக்டர் சிம்ரான்சித்ஜிங் கலோன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாக ராஜன், உதவி கலெக்டர்கள் விஜயா, தனப்பிரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உள் பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story