திருவண்ணாமலையில் கோலாகலம்: சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றினார் - பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தேசிய கொடியேற்றினார். விழாவில் பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை,
சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமை தாங்கினார்.
காலை 9 மணி அளவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்கள் மற்றும் பலூன்களை அவர் பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் கந்தசாமி திறந்த ஜீப்பில் நின்றவாறு சென்று பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உடன் சென்றார்.
விழா பந்தலில் அமர்ந்திருந்த சுதந்திர போராட்ட தியாகிகள் இடத்துக்கு சென்று தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இதையடுத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் 168 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி முகமை உள்பட பல்வேறு அரசு துறைகள் சார்பாக 1,101 பேருக்கு ரூ.3 கோடியே 96 லட்சத்து 28 ஆயிரத்து 965 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாடு, தேச ஒற்றுமை, இயற்கையை காத்தல், மரம் வளர்த்தல், மழைநீர் சேகரித்தல், பசுமையை மீட்டெடுத்தல் போன்றவற்றை குறிக்கும் வகையில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, உதவி கலெக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழா நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story