மாவட்ட செய்திகள்

சின்னாளபட்டி அருகே, குடிநீர் கேட்டு கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் செய்த பொதுமக்கள் + "||" + Village Board meeting asking for drinking water Civilians who dispute

சின்னாளபட்டி அருகே, குடிநீர் கேட்டு கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் செய்த பொதுமக்கள்

சின்னாளபட்டி அருகே, குடிநீர் கேட்டு கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் செய்த பொதுமக்கள்
சின்னாளபட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
சின்னாளபட்டி, 

சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஆத்தூர் ஒன்றியத்தில் சின்னாளபட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி செயலர் சேசுராஜ் தலைமை தாங்கினார். பார்வையாளராக ஆத்தூர் ஒன்றிய ஆணையாளர் சீதாராமன் கலந்து கொண்டார். கூட்டத்தில் அரசின் திட்டங்கள், ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து ஊராட்சி செயலாளர் வாசித்தார். அப்போது பொதுமக்கள் ஊராட்சி பகுதிகளில் 5 நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். எனவே, காவிரி கூட்டுக்குடிநீரை வினியோகம் செய்ய பஞ்சம்பட்டியில் தரைநிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்தனர். மேலும் பஞ்சம்பட்டியில் உள்ள குருவச்ச ஓடையை மூடி ரோடு போட்டதால் மழை காலத்தில் மழைநீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது. எனவே, அந்த இடத்தில் பாலம் கட்ட வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஊராட்சி செயலாளர் பஞ்சம்பட்டிக்கு தினசரி 3 லட்சம் லிட்டர் காவிரி தண்ணீர் தான் வழங்கப்படுகிறது. அதனை முறையாக வினியோகித்து வருகிறோம் என்றார். இதற்கு சமாதானம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னிலைக்கோட்டை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சபின் தேவராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கூச்சலிட்டனர்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் விளாம்பட்டி ஊராட்சியில் செயலாளர் திலகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. அப்போது ஊராட்சி பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி கிராம சபை கூட்டத்தை நடத்த விடமால் தடுத்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகள் வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர்.

ஆத்தூர் ஒன்றியம் பித்தளைப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது சிலர் மது அருந்தி விட்டு குடிதண்ணீர் சம்பந்தமாக தகராறில் ஈடுபட்டனர். அப்போது கிராம சபை கூட்டத்திற்காக உட்கார்ந்திருந்த பெண்கள் எழுந்து ஓடினார்கள். உடனடியாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.

சத்திரப்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர் ஞானசேகர் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பருவமழைக்கு முன்பு குளங்கள், வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல், சாலைப்பணிகள் ஆகியவற்றை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்ராஜ், மஞ்சநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி அபிராமி நகரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தனி அலுவலர் மலரவன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தீர்மானங்களை வாசித்தார். மாலப்பட்டியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும். காமாட்சி நகரில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். அனுமந்தநகர் மேம்பாலத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதனை கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு, சுகாதாரம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

திண்டுக்கல் ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் முத்துநகர் மற்றும் வேதாத்திரிநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், 13-வது வார்டில் உள்ள காந்திஜிதெரு, வ.உ.சி.தெரு, பாரதியார்தெரு, திருவள்ளுவர் தெரு, நேதாஜிதெரு ஆகிய தெருக்களில் குழாய்கள் அமைத்தும் 3 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் தனியார் லாரிகளில் ஒரு குடம் ரூ.10-க்கு குடிநீர் வாங்கும் நிலை உள்ளது.

எனவே, வீடுகள் தோறும் குழாய் இணைப்பு கொடுத்தும், தெருக்குழாய்களை சீரமைத்தும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும். இல்லையெனில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க வேண்டும். அதுவரை தினமும் 10 குடம் குடிநீர் என கணக்கிட்டு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் மானியமாக வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.