மாவட்ட செய்திகள்

தாராபுரத்தில், மீண்டும் பணி வழங்கக்கோரி வாலிபர் உண்ணாவிரதம் + "||" + In Tarapuram, the young man fasting again for work

தாராபுரத்தில், மீண்டும் பணி வழங்கக்கோரி வாலிபர் உண்ணாவிரதம்

தாராபுரத்தில், மீண்டும் பணி வழங்கக்கோரி வாலிபர் உண்ணாவிரதம்
தாராபுரத்தில் மீண்டும் பணி வழங்கக்கோரி வாலிபர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
தாராபுரம்,

கடந்த 2011-ம் ஆண்டு, தமிழக அரசு பல்வேறு காரணங்களை முன்வைத்து, மக்கள் நலப்பணியாளர்களை ஒட்டுமொத்தமாக அந்த பணியிலிருந்து நீக்கம் செய்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நலப்பணியாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு மீண்டும் அந்த பணி வாய்ப்பை வழங்க வேண்டும் எனக்கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

ஆனால் தமிழக அரசு அவர்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை. அதன் பிறகு அவர்கள் சங்கத்தின் மூலமாக மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி, நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார்கள். தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரை அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஏற்கனவே மக்கள் நலப்பணியாளராக வேலை செய்து வந்த, தாராபுரம் அருகே உள்ள ரெட்டாரவலசு வடக்குத்தெருவைச் சேர்ந்த, சுப்பிரமணியன் என்பவரின் மகன் சதீஸ்குமார் (வயது 32) என்பவர் தனக்கு மீண்டும் மக்கள் நலப்பணியாளர் பணியை வழங்க வேண்டும் என கோரி, தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ‘சுதந்திர நாடா சுடுகாடா, பறிக்கப்பட்ட பணியை வழங்கும் வரை உண்ணாநிலை’ என்று அச்சிடப்பட்ட பதாகையை கையில் ஏந்தியவாறு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சதீஸ்குமார் கூறியதாவது:-

எனது தந்தை இறந்துவிட்ட நிலையில், நானும் எனது தாயும் கிராமத்தில் வசித்து வருகிறோம். பிளஸ்-2 வரை படித்த எனக்கு வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தேன். அரசு தான் என்னை முறையாக தேர்வு செய்து, மக்கள் நலப்பணியாளர் என்கிற பணியை வழங்கியது. அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்துக்கொண்டு, நானும் எனது தாயும் பிழைப்பு நடத்தி வந்தோம். இந்த நிலையில் தமிழக அரசு மக்கள் நலப்பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கம் செய்துவிட்டது. திடீரென வேலை இழப்பு ஏற்பட்டதால், வருமானம் இல்லாமல் அவதிப்படுகிறோம். எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்னும் திருமணம் ஆகவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால், வேறு வேலைக்கும் செல்ல முடியவில்லை.

எனவே தமிழக அரசு எனக்கு மீண்டும் மக்கள் நலப்பணியாளர் பணியை வழங்கி, என்னையும் எனது தாயையும் காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ் செந்தில்மாலா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சதீஸ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, மக்கள் நலப்பணியாளர்களின் பிரச்சினைக்கு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் இருப்பதால், அரசுதான் முடிவெடுக்க வேண்டும். எனவே உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, சதீஸ்குமார் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.