பொதுசேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை


பொதுசேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 11:17 PM GMT)

பொது சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

புதுச்சேரி,

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் குடியிருப்பு, சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை இணைய தளம் வழியாக வழங்குவது கடந்த 1.7.2019 அன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் பொதுமக்கள் சான்றிதழை எளிதாக பெறவும், நேர விரயத்தை தவிர்க்கவும் உதவும். சான்றிதழை பெற விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் இதற்கென திறக்கப்பட்டுள்ள மையத்தில் நேரடியாக வந்து இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

வீட்டில் இணைய தள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் இருப்பின் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே சான்றிதழ் வேண்டி இலவசமாக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் மேல்படிப்பு மற்றும் உதவித்தொகை பெறவும் அவர் களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே இலவசமாக விண்ணப்பிக்கலாம். எனவே பொதுமக்களும், மாணவ- மாணவிகளும் வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

பொதுமக்கள் பொதுசேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க விரும்பினால் அவர்கள் அதிக அளவு கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் பொருட்டு பொதுசேவை மையங்கள் வசூலிக்க வேண்டிய கட்டணங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நிர்ணயம் செய்துள்ளது. விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.25, ஆவணங்கள் ஸ்கேன் அல்லது பிரிண்ட் செய்ய பக்கம் ஒன்றுக்கு ரூ.2 மட்டுமே பொதுசேவை மையங்கள் வசூலிக்கலாம்.

அதற்கான ரசீதை அவர்கள் பொதுமக்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் பொது சேவை மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது சேவை மையங்கள் அல்லாத தனியார் இணைய நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் அதிக தொகை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆவணங்களை எளிமையாக சரிபார்க்கும் பொருட்டும் விரைவாக விண்ணப்பங்களை பரிசீலனை செய்யவும் வழங்கப்பட்ட சான்றிதழ்களை எளிய முறையில் சரிபார்க்கவும், மேற்பார்வையிடவும் ஏதுவாக இணையதளம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இணையம் மூலமாக அல்லது நேரடியாக விண்ணப்பித்தாலும் டிஜிட்டல் கையொப்பமிட்ட பாதுகாப்பான சான்றிதழ்களை எங்கு வேண்டுமானாலும் பொதுமக்கள் எடுத்து கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சான்றிதழ்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும், அவற்றை பெறவும் மிகவும் காலதாமதம் ஆவதாக வந்த புகாரை தொடர்ந்து வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நாளை மறுதினத்துக்குள் நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வசதிக்காக ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் 4 கணினிகள் கொண்ட உதவி மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story