மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், 2 மாணவர்கள் பலி - பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு சென்றபோது பரிதாபம் + "||" + Bus collision on a motorcycle, 2 students killed

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், 2 மாணவர்கள் பலி - பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு சென்றபோது பரிதாபம்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், 2 மாணவர்கள் பலி -  பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு சென்றபோது பரிதாபம்
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு சென்றபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர், 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் காந்திநகர் புதுக்காலனியை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவருடைய மகன் சக்தி சிவகண்ணன்(வயது 17). அதே பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் சந்தோஷ்குமார்(17). இவர்கள் இருவரும் காடாம்புலியூரில் உள்ள மத்திய அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் நேற்று காலையில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சக்தி சிவகண்ணன் ஓட்டினார்.

சென்னை-கும்பகோணம் சாலையில் காடாம்புலியூர் தாமரைக்குளம் அருகில் வந்து கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் நோக்கி வந்த அரசு பஸ், இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சக்தி சிவகண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷ்குமார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தோஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இந்த விபத்து பற்றி தகவல் அறிந்தததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ரேவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பலியான சக்திசிவகண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.