அறச்சலூர் அருகே, மயானம் கேட்டு ‘பாடை’ கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம் - வீடுகளில் கருப்பு கொடி கட்டியதால் பரபரப்பு


அறச்சலூர் அருகே, மயானம் கேட்டு ‘பாடை’ கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம் - வீடுகளில் கருப்பு கொடி கட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Aug 2019 10:30 PM GMT (Updated: 15 Aug 2019 11:54 PM GMT)

அறச்சலூர் அருகே மயான வசதி கேட்டு பாடை கட்டி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வீடுகளில் கருப்பு கொடியும் கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அறச்சலூர்,

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள பெரிய தொட்டிபாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் குடிநீர், மின்சாரம் வசதி உள்ளது. ஆனால் இறந்தவர்களை புதைப்பதற்கு மயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை சாலையோரங்களில் புதைத்து வந்தனர்.

இந்தநிலையில் தங்கள் பகுதியில் மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சுதந்திர தினத்தன்று (நேற்று) வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று பெரிய தொட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மயான வசதி வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாடை கட்டினார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் பாடையை தோளில் சுமந்து கொண்டு நேற்று காலை 8.30 மணி அளவில் பெரிய தொட்டிபாளையம் பகுதியில் உள்ள வெள்ளோடு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட வந்து கொண்டு இருந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை தாசில்தார் துரைசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘பெரிய தொட்டிபாளையம் பகுதியில் மயான வசதி இல்லை. இதனால் எங்கள் பகுதியில் இறந்தவர்களின் உடல்களை சாலையோரமாக புதைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால் மயான வசதி வேண்டும் என்று முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சுதந்திர தினத்தன்று கருப்பு கொடி கட்டியும், பாடை கட்டியும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்து இருந்தோம். அதன்படி இன்று (அதாவது நேற்று) போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர். அதற்கு தாசில்தார் துரைசாமி கூறுகையில், ‘பெரிய தொட்டிபாளையம் பகுதியில் மயான வசதி செய்து கொடுக்க உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் 9.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மயான வசதி கேட்டு பொதுமக்கள் கருப்பு கொடி கட்டியும், பாடை கட்டியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story