ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்


ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்
x
தினத்தந்தி 16 Aug 2019 12:46 AM GMT (Updated: 16 Aug 2019 12:46 AM GMT)

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

பிரேசில் நாட்டில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு சம்பவத்தன்று விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை போட்டு கொண்டு இருந்தனர். அப்போது, வெனிசுலா நாட்டை சேர்ந்த பால்சாபப்சிஸ்டா என்ற பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று பெண் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆனால் அவரிடம் இருந்து சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் சிக்கவில்லை. இதையடுத்து அவர் போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அவர் மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடந்த எக்ஸ்ரே பரிசோதனையில் அவரது வயிற்றில் கேப்சூல்களில் அடைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவரது வயிற்றில் இருந்த 80 கேப்சூல்களை வெளியே எடுத்தனர்.

அந்த கேப்சூல்களில் கொகைன் என்ற போதைப்பொருள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போதை தடுப்பு பிரிவினர் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். இதையடுத்து போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் பால்சாபப் சிஸ்டாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story