நாமக்கல்லில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2019 4:30 AM IST (Updated: 16 Aug 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று நாமக்கல்லில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல்,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பேட்டப்பனூர் கிராமத்தில் மதுக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காவேரிநகர் பகுதியை சேர்ந்த ராஜா (வயது43) விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 14-ந் தேதி இரவு இந்த கடைக்கு வந்த மர்ம நபர்கள் ராஜாவை குத்தி கொலை செய்துவிட்டு, கடையில் இருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளை அடித்து சென்றனர்.

இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்தும், அதில் தொடர்புடைய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று நாமக்கல்லில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அசோக், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மகேந்திரன், தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகி ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்ட விற்பனையாளர் ராஜாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் துணை தலைவர் மணிகண்டன், பொருளாளர் குமரவேல், சி.ஐ.டி.யு. நிர்வாகி சுந்தரமூர்த்தி, உடல் ஊனமுற்றோர் சங்கம் சார்பில் காந்தி உள்பட டாஸ்மாக் விற்பனையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஜெகதீசனிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தனர். இந்த போராட்டம் காரணமாக நேற்று நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான மதுக்கடைகள் மதியம் 12 மணிக்கு பதிலாக பிற்பகல் 1 மணிக்கு திறக்கப்பட்டது.

Next Story