வாணியம்பாடி அருகே ஏரிகள் தூர்வாரும் பணி - அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
வாணியம்பாடி அருகே ஏரிகளை தூர்வாரும் பணிகளை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி,
தமிழக அரசு மழைநீர் சேகரிப்பதற்காகவும், ஏரிகளை பராமரிப்பதற்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக வாணியம்பாடியை அடுத்த சின்னவேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரும் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். 22 ஏக்கர் பரப்பளவில் உள்ள சின்னவேப்பம்பட்டு ஏரியை தூர்வாரும் பணியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் 200 ஏரிகள் தூர்வாரப்பட உள்ளது. இந்த ஏரிகள் அனைத்தும் நேரடியாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளும், பொதுமக்களும் இணைந்து பணியாற்றுவார்கள். இங்கு அப்புறப்படுத்தப்படும் மண்கள் முறையான அனுமதி பெற்ற பிறகு வெளியில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும்.
ஏரிகள் தூர்வாரும் பணிகள் ஒவ்வொரு தொகுதியிலும் உடனடியாக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இதேபோல், பொது பணித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள ஏரிகளும் தூர்வாருவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவி.சம்பத்குமார், கே.ஜி.ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, வசந்தி, பாலாஜி, ருத்ரப்பா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் எம்.கோபால், ஆர்.ரமேஷ், திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் டி.டி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story