கூச்சல்-குழப்பம், வாக்குவாதம்: குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு - வாயில் கருவாட்டை கவ்வி நூதன போராட்டம்
திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. காலை முதல் விவசாயிகள் வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியபோது கூட்டுறவு சங்க அதிகாரிகளும், வேளாண் அதிகாரிகள் இருந்தனர். மாவட்ட கலெக்டர் கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி ஆகியோர் இல்லை.
கூட்டம் தொடங்கிய சிறிதுநேரத்தில் விவசாயிகள் பொதுப்பணித்துறையில் ஊழல் நடக்கிறது. மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது. குடிமராமத்து பணிகள் முறையானவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினர். தொடர்ந்து பேசிய அவர்கள் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் கடந்த சில மாதங்களாக உயர்அதிகாரிகள் முறையான நேரத்துக்கு வருவதில்லை. எங்களது குறைகளை தெரிவித்து பயன் இல்லை என்றனர்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகள் கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக பணிக்காக வேறு ஒரு இடத்துக்கு சென்றுள்ளனர். அவர்கள் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள் என்றனர்.
இதை ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள், ஒவ்வொரு கூட்டத்துக்கும் அதிகாரிகள் காலதாமதமாக வருகின்றனர். நாங்கள் வெகு தொலைவில் இருந்து வருகிறோம். எங்களது கோரிக்கைகளை முன் வைக்க முடியவில்லை என்றனர். அப்போது அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் அதிகரிக்கவே கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் கூச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்ட அரங்கத்துக்குள் போலீசார் குவிந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், இக்கூட்டத்துக்கு அதிக அளவிலான போலீசார் குவித்து விவசாயிகளை ஒடுக்க பார்க்கின்றனர். அவர்கள் வெளியேற வேண்டும் என சத்தம் போட்டனர். இதையடுத்து போலீசார் வெளியே சென்றனர்.
அதிகாரிகள் கூட்டம் நடத்துவோம் அமைதியாக இருங்கள் என விவசாயிகளிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது விவசாயிகள் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற உயர் அதிகாரிகள் வரும் வரை நாங்கள் அமைதியாகவே இங்கேயே இருக்க போகிறோம். நாங்கள் யாரும் பேச மாட்டோம் என்று இருக்கையில் அமைதியாக இருந்தனர். ஒரு விவசாய சங்க பிரதிநிதி அதிகாரிகள் அருகே சென்று அவர்களின் மேஜையில் இருந்த மைக்கை அணைத்தார்.
சிறிதுநேரம் விவசாயிகள் அமைதியாக இருந்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகளில் ஒரு தரப்பினர் எழுந்து நம் கோரிக்கைகளை முன் வைக்க இக்கூட்டம் நடத்தப்படுகிறது. அதிகாரிகளை அழைத்து அப்புறம் நாம் இதுகுறித்து பேசுவோம். தற்போது கூட்டத்தை நடத்த ஒத்துழைப்போம். நம் விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை முன்வைப்போம் என்றனர்.
அப்போது அனைத்து விவசாயிகளும் அவர்களிடம் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இக்கூட்டம் கலெக்டர் வந்த பின்னரே தான் நடத்த வேண்டும். அதுவரை இக்கூட்டம் நடத்தக்கூடாது என்றனர். இதையடுத்து அனைத்து விவசாயிகளும் அமைதியாக அமர்ந்தனர்.
அப்போது அதிகாரிகள் கோரிக்கைகள் குறித்து தெரிவியுங்கள். கலெக்டர் வரும் நேரம் வந்து விட்டது என்றனர். மீண்டும் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் காலதாமதமாகவே கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தற்போது நேரம் கடந்து விட்டது. எனவே இக்கூட்டத்தை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினர். மேலும் அதிகாரிகள் வராததை கண்டித்து பெரும்பாலான விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து கோஷம் போட்டவாறே வெளியே சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் கலெக்டர் கந்தசாமி அங்கு வந்தார். கூட்டத்தில் இருந்த சில விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கூட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடத்தினர்.
இதற்கிடையே கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகளில் மாவட்ட உழவர் பேரவையை சேர்ந்த ஒரு தரப்பினர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வாயில் கருவாடுகளை கவ்வி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
அவர் கூறுகையில், 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. இதில் பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் மீன் போன்ற வளர்ச்சி திட்டம் அல்ல, கருவாடு போன்ற காய்ந்துபோன திட்டம். இத்திட்டத்தில் நடந்த மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story