மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை


மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக  வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 17 Aug 2019 4:45 AM IST (Updated: 17 Aug 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

மாதவரம் அருகே கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி ராணி அம்மாள். இவர் அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு நாகலட்சுமி (வயது 26), தீபா (24) ஆகிய 2 மகள்களும், கார்த்திக் (23) என்ற மகனும் உள்ளனர்.

நாகலட்சுமி, தீபா ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது. கார்த்திக் மாதவரம் அருகே கொளத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே உள்ள மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கார்த்திக் நேற்று காலை வழக்கம்போல் மெக்கானிக் கடையில் வேலை செய்து கொண்டு இருந்தார். பகல் சுமார் 12 மணி அளவில் கடையில் இருந்தபோது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடைக்குள் புகுந்து கார்த்திக்கை கண்டவுடன் வெட்ட முயன்றது.

உடனே அவர் களை பார்த்தவுடன் கார்த்திக் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குள் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திக்கின் தலை, கை, உடல் என பல இடங்களில் சரமாரியாக வெட்டியது. இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர்,அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது குறித்து மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாதவரம் உதவி கமிஷனர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடி, தலைமறைவான 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கொலை நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story