இணையதளத்தில் அவதூறான கருத்துகள் பரப்பப்படுகிறது, மோசடி வழக்கில் கைதான நடிகை சுருதி புகார்
இணையதளத்தில் தன்னை பற்றி அவதூறான கருத்துகள் பரப்பப்படுவதாக சைபர் கிரைம் போலீசில் நடிகை சுருதி புகார் அளித்தார்.
கோவை,
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் நடிகை சுருதி (வயது 21). இவர் ‘ஆடி போனா ஆவணி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இவர் கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு பிடித்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம், மணமகன் தேடுவதாக தகவல் வெளியிட்டார். மேலும் தனது அழகிய புகைப்படங்களையும் அதில் பதிவு செய்தார்.
இதனை பார்த்து ஏராளமான பட்டதாரி வாலிபர்கள் சுருதியை தொடர்பு கொண்டனர். பெரும்பாலும் அதிக சம்பளத்தில் வேலை பார்க்கும் பட்டதாரி என்ஜினீயர்கள், சுருதியை விரும்புவதாக போனில் தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் குறித்த முழு விவரத்தை பெற்றுக்கொள்வார். பின்னர் அந்த வாலிபர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்வார்.
பணம் மற்றும் நகையை பெற்றுக்கொண்டதும், தன்னுடைய தாய்க்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், அதனால் இப்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் சுருதி நழுவிவிடுவார். இவ்வாறு ஏராளமானோரிடம் ரூ.1½ கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுருதி மற்றும் அவருடைய தாய், தந்தை, தம்பி உள்ளிட்ட 4 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். தற்போது சுருதி ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.
இந்தநிலையில் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்துக்கு நடிகை சுருதி நேற்று வந்தார். போலீஸ் அதிகாரிகளின் முன் அவர் ஆஜர் ஆனார். அப்போது, இணையதளத்தில் தன்னைப்பற்றி அவதூறான கருத்துகள் பரப்பப்படுகிறது. அவற்றை அகற்றுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தார். பின்னர் நடிகை சுருதி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமண தகவல் மைய மோசடி வழக்கை வலிமையாக்க என்னை பற்றியும், என் தாய் மற்றும் குடும்பம் பற்றியும் அவதூறான கருத்துகள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் பரப்பப்படுகிறது. இதுபோன்ற கருத்துகள் பதிவிட்டு வருவதால் என் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். என்னால் சாதாரண, இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. நானும் உங்கள் வீட்டில் உள்ள பெண் போன்றவள் தான். இந்த வழக்கிலிருந்து மீள முடியவில்லை.
இணையதளத்தில் என்னை பற்றி பரப்பப்படும் அவதூறான கருத்துகள் குறித்து ஐகோர்ட்டு, தேசிய மனித உரிமை ஆணையம், பிரதமர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன். என் மீதான மோசடி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நாளை எண்ணி கார்த்திருக்கிறேன். அந்த ஒரு இடத்தில்தான் நான் குற்றமற்றவள் என சொல்ல முடியும்.
சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகள் பதிவிடுவது தொடர்பாக ஐகோர்ட்டில் நான் தாக்கல் செய்த மனு தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீஸ் முன்பு நான் ஆஜர் ஆனேன். அவர்களிடம் என் புகார் தொடர்பான ஆவணங்களை சமர்பித்துள்ளேன். ஏற்கனவே இந்த வழக்கில் என்னை கைது செய்தபோது போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பான வழக்கின் விசாரணை தனியாக நடைபெற்று வருகிறது. நான் தற்போது படங்களில் நடிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story