கிருஷ்ணகிரியில் ஊழியர் படுகொலை, டாஸ்மாக் மதுக்கடைகளை பூட்டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகளை பூட்டி விட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பீளமேடு,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த ராஜா (வயது 45) என்பவரை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். இதை கண்டித்தும், ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் கோவை பீளமேட்டில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கூட்டு கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஜான் தலைமை தாங்கி பேசியதாவது:-
டாஸ்மாக் கடைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதன்மூலம் குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுக்க முடியும். கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் ஊழியரை படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். பணி முடிந்து விற்பனை பணத்தை எடுத்து செல்லும் போது சிலர் வழிமறித்து கொள்ளையடிக்கின்றனர். எனவே ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கு நேரடியாக வந்து விற்பனை பணத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. வசதி ஏற்படுத்த வேண்டும். கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழ்செல்வன், ராமசுந்தரம், மதியழகன், ராக்கி முத்து, கணேஷ், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியை புறக்கணித்து விட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மதுபிரியர்கள் மதுவாங்க முடியாமல் திண்டாடினர். மாலை 4 மணி அளவில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் மதுபாட்டில்களை வாங்க கூட்டம் அலைமோதியது.
Related Tags :
Next Story