கூடலூர் பகுதியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் - சீமான் வழங்கினார்


கூடலூர் பகுதியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் - சீமான் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Aug 2019 10:30 PM GMT (Updated: 16 Aug 2019 8:46 PM GMT)

கூடலூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை சீமான் வழங்கினார்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சமீபத்தில் பெய்த கனமழையால் மண் சரிந்து சாலைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் வீடுகள் இடிந்தன. இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்த பொதுமக்களை சந்தித்து பேசிய அவரிடம் மழை வெள்ள பாதிப்பு குறித்து அவர்கள் விளக்கினர். பின்னர் அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார். நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட கழக பகுதிக்கு சீமான் சென்று தோட்ட தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டு நிவாரண பொருட்கள் வழங்கினார். முன்னதாக அவர்கள் டேன்டீ குடியிருப்புகள் மிகவும் மோசமாக உள்ளது, குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருவதால் குழந்தைகளை படிக்க வைக்க முடிய வில்லை, தற்போது பெய்த மழையில் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது, இதுவரை யாரும் நிவாரண பொருட்கள் வழங்க வில்லை, எங்களது வீடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை கேட்ட அவர், டேன்டீ தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பின்னர் சேரம்பாடி, எருமாடு, அய்யன்கொல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரியில் நிவாரண பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. நீர்நிலைகளை முறையாக தூர்வாரி இருந்தால் மழைவெள்ளம் ஊருக்குள் புகுந்து இருக்காது. ஆற்று வாய்க்கால் கரையோரங்களில் தடுப்புச்சுவர்களை கட்டி இருக்க வேண்டும். நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை தடுத்திருக்க வேண்டும். ஆனால் பொறுப்பற்ற முறையில் அரசு உள்ளது. இனிவரும் காலங்களில் இயற்கை பேரிடர் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே நீர் மேலாண்மை திட்டம் கிடையாது. புதிய நீர் தேக்கங்களை உருவாக்க வேண்டும். ‘கிளன் இந்தியா‘ திட்டத்தை விட ‘கிரீன் இந்தியா‘ திட்டம் அவசியமானது.

நீலகிரியில் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். குத்தகை நிலமாக இருந்தால், அதில் பயிரிட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நில உரிமையாளர்களுக்கு சென்றுவிடக்கூடாது. பட்டா இல்லாத நிலத்தில் வசிப்பவர்களுக்கு வாக்குரிமை, ரேஷன் கார்டு, மின்சார இணைப்பு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய இழப்பீடு, நிவாரணம் வழங்கவில்லை எனில் நாம் தமிழர் கட்சி உதவி செய்யும். அதற்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சத்யராஜ் உள்ளிட்டோரிடம் பேசி உள்ளேன். அவர்களும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story