தூத்துக்குடியில் இருந்து அடுத்த ஆண்டு தினமும் 20 விமானங்கள் இயக்கப்படும் - விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் தகவல்
தூத்துக்குடியில் இருந்து அடுத்த ஆண்டு தினமும் 20 விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி விமான நிலையம் தொடர்ந்து வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு பயணிகள் வரத்து மற்றும் விமான சேவை அதிகரித்து உள்ளது. விரைவில் ஆண்டுக்கு 2 லட்சம் பயணிகள் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து தினமும் 20 விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தை 3-ம் நிலை விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்காக விமான நிலையங்களின் ஆணையம் நிதி ஒதுக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவையொட்டி விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள், போலீசார், பாதுகாவலர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி, ரங்கோலி, இசைநாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் தூத்துக்குடி விமான நிலைய மேலாளர் ஜெயராமன், மற்றும் விமான நிலைய ஊழியர்கள், பாதுகாவலர்கள், விமான நிறுவன ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story