பாதுகாப்பு வழங்கக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் தர்ணா
பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பி.என்.ரோடு நாதம்பாளையம் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் யுவராஜ். இவர் கடந்த ஜூன் மாதம் கடையில் வியாபாரம் செய்த பணத்தை வங்கியில் செலுத்த சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டி ரூ.1½ லட்சத்தை பறித்து சென்றது. இந்த பரபரப்பு அடங்கும் முன்பு கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளர் ராஜாவை (வயது 43) கடந்த 14-ந்தேதி இரவு மர்ம நபர்கள் சிலர் கடைக்குள் புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு திருப்பூர் மாவட்ட அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். அப்போது டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திடீரென அலுவலக வளாகத்திலேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் கிருஷ்ணகிரி அருகே படுகொலை செய்யப்பட்ட ராஜாவின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகையும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் வழங்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு குறைவாக உள்ள கடைகளை கண்டறிந்து அந்த கடைகளுக்கும், பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் நடைமுறையில் உள்ள கடையின் விற்பனை தொகையை சம்பந்தப்பட்ட வங்கிகள் கடைகளுக்கே சென்று வசூல் செய்வதை போல திருப்பூர் மாவட்டம் முழுவதும் வசூல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். பணியாளர்கள் குறைவாக உள்ள கடைகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலான கொள்ளை சம்பவங்கள் இரவு நேரங்களில் நடப்பதால் கடையின் விற்பனை நேரத்தை அரசு குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தது.
மனுவை பெற்று கொண்ட டாஸ்மாக் மேலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன் பின்னரே அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ராஜா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவியும், அவருடைய மனைவிக்கு அங்கன்வாடி மையத்தில் வேலையும் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story