அனைத்து மொழிகளிலும் “தேசிய கல்வி கொள்கையை மொழி பெயர்ப்பது தேவையற்றது” - மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு வாதம்


அனைத்து மொழிகளிலும் “தேசிய கல்வி கொள்கையை மொழி பெயர்ப்பது தேவையற்றது” - மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு வாதம்
x
தினத்தந்தி 17 Aug 2019 5:00 AM IST (Updated: 17 Aug 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

“தேசிய கல்வி கொள்கையை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பது தேவையற்றது” என்று மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் வாதாடினார்.

மதுரை,

மதுரை சோனைநகரைச் சேர்ந்த பகவத்சிங், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தேசிய கல்வி கொள்கையின் வரைவு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது பற்றி பெருமளவில் விவாதிக்கப்பட வேண்டும். பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள் குறித்து அறிய வேண்டும். இவற்றை அறிந்தால் மட்டுமே முறையாக கருத்துகளை முன்வைக்க முடியும். அதற்கு தேசிய கல்வி கொள்கையின் வரைவானது அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது அவசியம்.

எனவே அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் தேசிய கல்வி கொள்கையின் வரைவை வெளியிடும் வரை அதை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் மொழி பெயர்த்து, அது தொடர்பாக வெளிப்படையாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, டிசம்பர் 3 அமைப்பின் தலைவர் தீபக்நாதன், இந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக்கோரி ஒரு மனு தாக்கல் செய்தார்.

அப்போது தீபக்நாதன் சார்பில் வக்கீல் ஹென்றி டிபேன் ஆஜராகி, “தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மாற்றுத்திறனாளிகள் முழுவதும் படிக்கும் வகையில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அவர்களுக்கு காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும். கடந்த சில வாரங்களாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. எனவே மாற்றுத்திறனாளிகளும் தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை முழுவதும் படித்து அறிந்து கொள்ள காலஅவகாசம் வழங்க வேண்டும்” என்று வாதாடினார்.

பின்னர் மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், “தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் வழங்கப்பட்டுள்ளது. இதன் சுருக்கம் பிற மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்பது தேவையற்றது. மேலும் தற்போது விரிவான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதம், கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

விசாரணை முடிவில், “இந்த வழக்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மத்திய-மாநில கமிஷனர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை மாற்றுத்திறனாளிகள் கேட்டு, படித்து அறிந்து கொள்ளும் வகையிலும், அவர்களிடம் கருத்து கேட்பது குறித்தும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மத்திய, மாநில கமிஷனர்கள் தங்களது கருத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story