காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு


காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு
x
தினத்தந்தி 17 Aug 2019 4:45 AM IST (Updated: 17 Aug 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 20-ந் தேதி ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வைசியாள் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு புதுவை மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, துணைத்தலைவர் பெத்த பெருமாள், தேவதாஸ், முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாள் பவள விழாவை முன்னிட்டு அடையாள சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டது. இதனை கட்சி சார்பில் நடைபெறும் அனைத்து கூட்டங்கள், விளம்பரங்களில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று கட்சியின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்து கொண்ட ராகுல்காந்திக்கு நன்றி தெரிவிப்பது, காங்கிரஸ் கட்சிக்கு சோதனை வந்தபோதெல்லாம் அதை துணிவுடன் எதிர்கொண்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்ற சாதனை படைத்த சோனியா காந்தியை மீண்டும் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுத்த இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு நன்றி.

வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்திய தேசத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து சென்ற தியாக தலைவர் ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளை பவள விழாவை வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, 20-ந் தேதி அன்று மாநிலம் முழுவதும் மரக்கன்று நடுதல், ரத்ததானம், கண்தானம், மருத்துவ முகாம் அன்னதானம் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் வழங்குவது.

புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 20-ந் தேதி கம்பன் கலையரங்கில் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவாக கொண்டாடுவது, இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக், செயலாளர் சஞ்சய்தத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க செய்வது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story