கவர்னரால் கைகள் கட்டப்படாவிட்டால் புதுவையை முதன்மையான மாநிலமாக மாற்றிக் காட்டுவோம் - நாராயணசாமி


கவர்னரால் கைகள் கட்டப்படாவிட்டால் புதுவையை முதன்மையான மாநிலமாக மாற்றிக் காட்டுவோம் - நாராயணசாமி
x
தினத்தந்தி 17 Aug 2019 5:30 AM IST (Updated: 17 Aug 2019 5:25 AM IST)
t-max-icont-min-icon

கவர்னரால் கைகள் கட்டப்படாவிட்டால் புதுவையை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டுவோம் என்று கீழூர் தியாகிகள் நினைவிடத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

பிரான்ஸ் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி யூனியன் பிரதேசம் இந்தியாவோடு இணைக்கப்பட்ட சட்ட பூர்வ பரிமாற்ற நாள் நிகழ்ச்சி புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்றது. கீழுர் நினைவு மண்டபத்தில் நேற்றுக்காலை நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் கீழுர் நினைவிடத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் நாராயணசாமி தியாகிகளுக்கு இனிப்பு வழங்கி கவுரவப்படுத்தி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்யத்தை எதிர்த்து புதுவை சுதந்திரம் பெற வேண்டும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என முத்துகுமாரப்ப ரெட்டியார், வெங்கடசுப்பா ரெட்டியார், சுப்புராய நாயக்கர், வ.சுப்பையா, அன்சாரி துரைசாமி ஆகியோர் அரும்பாடுபட்டனர் பல போராட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து இந்த இணைப்புக்காக கீழுர் பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்படித்தான் நாம் சுதந்திரம் பெற்றோம்.

1964-ம் ஆண்டு நாம் முழுமையாக இந்தியாவுடன் இணைந்தோம். கடந்த காலங்களில் நேரு தலைமையில் ஆட்சி இருந்தபோது புதுவை மாநிலம் வெளியுறவுத்துறை அதிகாரத்தில் இருந்தது, அப்போது 100 சதவீத நிதியை மத்திய அரசு கொடுத்தது. அதற்கு பிறகு உள்துறைக்கு நமது புதுவை மாநிலம் மாற்றப்பட்டது, அப்போது நமது மானியம் 70 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

மத்திய அரசின் நிதி படிப்படியாக குறைக்கபட்டு தற்போது 26 சதவீதமாக உள்ளது. ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது தனி கணக்கு தொடங்குகிறோம் என கூறியதால் நிதி 26 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு மத்திய அரசு 42 சதவீத நிதி கொடுக்கிறது.

ஆனால் புதுவைக்கு மட்டும் 30-ல் இருந்து 26 சதவீதமாக நிதி குறைக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான டெல்லிக்கு கொடுக்கும் நிதியை யூனியன் பிரதேசமான புதுவைக்கு மத்திய அரசு கொடுப்பதில்லை. 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதால் ஒவ்வொரு ஆண்டும் 650 கோடி ரூபாய் நமக்கு திரும்ப தர வேண்டும் ஆனால் அந்த பணம் கொடுக்கப்படவில்லை.

தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு கேட்ட ரூ.100 கோடி கிடைக்கவில்லை. ஆயினும் மாநிலத்தின் நிதி ஆதாரத்தை 65 சதவீதம் நாம் உயர்த்தியுள்ளோம், நானும் (நாராயணசாமி), அமைச்சர்களும் சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து வருவதால் இது ஏற்பட்டது.

புதுவை மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் பல கட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம், அதனால்தான் கல்வி, காவல்துறை சுற்றுலா, உள்ளிட்டவற்றில் புதுவை முதலிடம் பெற்றுள்ளது. ஒரு கவர்னர் நம் கையை கட்டியிருக்கும்போதே நாம் இப்படி சாதனை படைக்கிறோம், நம் கையை விடுவித்துவிட்டால் புதுவை மாநிலத்தை முதன்மையான மாநிலமாக இந்தியாவில் மாற்றுவோம்.

பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். அவர்கள் தங்க இடம் கிடைக்காத அளவு கூட்டம் நிரம்பி வழிகிறது, இதற்கு காரணம் சட்டம், ஒழுங்கு நன்றாக இருப்பதுதான். சுற்றுலா பயணிகளுக்கு இங்கு பாதுகாப்பு கிடைக்கிறது. இதுதான் நாம் சுதந்திரம் பெற்றதற்கான உண்மையான அடையாளம்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, வெங்கடேசன், புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீவஸ்தவா, மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் அரசு துறை அதிகாரிகள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழா தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கவர்னர் கிரண்பெடி கீழுர் வந்து தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story