அரசு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மீஞ்சூர் ஒன்றியத்தில் மத்திய குழு ஆய்வு


அரசு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மீஞ்சூர் ஒன்றியத்தில் மத்திய குழு ஆய்வு
x
தினத்தந்தி 17 Aug 2019 10:30 PM GMT (Updated: 17 Aug 2019 5:02 PM GMT)

மீஞ்சூர் ஒன்றியத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மீஞ்சூர்,

மத்திய அரசின் நலத்திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டம், வீடு வழங்கும் திட்டம், மகளிர் குழு மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் மாநில அரசுகளால் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் ஊரக வளர்ச்சி திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சிகள் வழியாக தேர்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிவதற்காக மத்திய அரசு சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள கடப்பாக்கம், ஆவூர், வன்னிப்பாக்கம் ஆகிய கிராம ஊராட்சிகளில் மத்திய குழுவை சார்ந்த சதாக்சாராசுவாமி, வெங்கடேஷ், உதவி திட்ட அலுவலர் அசோகன், மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் கவுரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்பாபு ஆகியோர் நேரில் சென்றனர்.

அப்போது அவர்கள், அங்கு நடைபெறும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் செயல்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று பயனாளிகளை அழைத்துப் பேசினர்.

அப்போது 100 நாள் வேலை வழங்கும் திட்டத்தை 300 நாட்களாக வழங்கவேண்டும், வேலைக்கான ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும் என பயனாளிகளின் கோரிக்கையை அவர்கள் பதிவு செய்தனர். மத்திய அரசின் திட்டங்கள் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்தனர்

அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், மோகன்குமார் உட்பட பல்வேறு அதிகாரிகள், பயன்பெறும் பயனாளிகள் உடனிருந்தனர்.

Next Story