பெரம்பலூரில் ‘ஜெல்லி’ மிட்டாய் தின்ற சிறுவன் திடீர் சாவு


பெரம்பலூரில் ‘ஜெல்லி’ மிட்டாய் தின்ற சிறுவன் திடீர் சாவு
x
தினத்தந்தி 17 Aug 2019 11:15 PM GMT (Updated: 17 Aug 2019 6:37 PM GMT)

பெரம்பலூரில் ‘ஜெல்லி’ மிட்டாய் தின்ற 4 வயது சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள ஆலம்பாடி பிரிவு ரோடு, அன்னை நகரை சேர்ந்தவர் தர்மராஜ். கொத்தனார். இவரது மனைவி சசிதேவி. இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ரங்கநாதன் (வயது 4) என்ற மகன் மற்றும் நர்மதாஸ்ரீ(1½) என்ற மகள் இருக்கிறாள். ரங்கநாதன் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். நேற்று பள்ளிக்கு விடுமுறை நாள் என்பதால் வீட்டில் ரங்கநாதன் விளையாடி கொண்டிருந்தான்.

இந்நிலையில் மதியம் சசிதேவி, ரேஷன் கார்டு பெறு வதற்கு விண்ணப்பிப்பதற்காக அருகே உள்ள கணினி மையத்திற்கு புறப்பட்டுள்ளார். அப்போது ‘நானும் வருகிறேன்’ என்று தாயிடம் ரங்கநாதன் அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ரங்கநாதனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு சசிதேவி சென்றுள்ளார். அப்போது வழியில் ஒரு கடையில் மிட்டாய் வாங்கிக்கொடுத்து வீட்டில் விட்டு விட்டு செல்லலாம் என்று எண்ணிய சசிதேவி, கடைக்கு சென்றார். அப்போது ரங்கநாதன் ரூ.10 மதிப்பிலான ஜெல்லி மிட்டாயை வாங்கி தருமாறு அடம்பிடித்துள்ளான். இதனால் ஆசையாக கேட்ட மகனுக்கு ஜெல்லி மிட்டாயை சசிதேவி வாங்கி கொடுத்துள்ளார்.

பின்னர் ரங்கநாதனை வீட்டில் விட்டு வருவதற்காக அவர் மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் ஜெல்லி மிட்டாய் முக்கால் வாசியை ரங்கநாதன் தின்றுள்ளான். வீட்டின் அருகே சென்றபோது இடுப்பில் இருந்த ரங்கநாதனை, தாய் சசிதேவி இறங்குமாறு கூறியுள்ளார். ஆனால் அவன் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்ததை கண்டு சசிதேவி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர், உறவினர்கள் உதவியுடன் மகனை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு ரங்கநாதனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் சசிதேவி மற்றும் அவரது உறவினர்கள் ரங்கநாதனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்வதாக இருந்தது. இதையடுத்து ரங்கநாதன் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெல்லி மிட்டாய் தின்றதில் 4 வயது சிறுவன் இறந்த சம்பவம் பெரம்பலூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலாவதியான ஜெல்லி மிட்டாயை தின்றதில் அந்த சிறுவன் இறந்தானா? அல்லது ஆசையாக வாங்கிய ஜெல்லி மிட்டாயை அவசரமாக தின்றதில் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதில் இறந்தானா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெங்கநாதன் இறந்தது எப்படி? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story