கொள்ளிடம் அருகே குறுவை நெற்பயிர் பழுப்பாகியதற்கு விதை நெல் காரணமா? அதிகாரிகள் ஆய்வு


கொள்ளிடம் அருகே குறுவை நெற்பயிர் பழுப்பாகியதற்கு விதை நெல் காரணமா? அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 18 Aug 2019 4:00 AM IST (Updated: 18 Aug 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே குறுவை நெற்பயிர் பழுப்பாகியதற்கு விதைக்கப்பட்ட விதை நெல் காரணமா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் விவசாயிகள் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் நெற்பயிர் பழுப்பு நிறமாகி, வளர்ச்சி குன்றிய நிலையில் குறைந்த எண்ணிக்கையில் நெல் மணிகளை கொண்ட கதிர் வந்துள்ளது.

வேளாண்மைத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கோ-51 ரக நெல் விதையை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்த நெற்பயிர்களில் ஏற்பட்ட இத்தகைய மாற்றத்தினால் நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ? என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள், வேளாண்மை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆய்வு

அதன்பேரில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட வேளாண்மை இயக்குனரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக வேளாண்மை உதவியாளருமான பன்னீர்செல்வம், மாவட்ட விதைச்சான்று ஆய்வு துணை இயக்குனர் கல்யாணசுந்தரம், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய மரபியல் துறை உதவி பேராசிரியர் மணிமாறன் ஆகியோர் கொண்ட குழுவினர் கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் கிராமத்திற்கு நேரில் சென்று நெற்பயிர் பழுப்பாகியதற்கு விதை நெல் காரணமா? என்று ஆய்வு செய்தனர்.

அப்போது மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர், அங்கிருந்த விவசாயிகளிடம் கூறுகையில், இங்கு பயிரிடப்பட்டுள்ள நெற் கதிர் முற்றியது போல் உள்ளது. பழுப்பு நிறமாகி உள்ளது மற்றும் விதையில் கலப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது நெற்பயிரை ஆய்வு செய்ததில் ஒரு ரக நெல்விதை மட்டுமே பயிர் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த கலப்பும் இல்லை என்றார்.

தொடர்ந்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் கூறுகையில், 25 நாட்களில் நாற்றை பறித்து நட்டால் கதிர் நன்றாக இருக்கும். எந்த பாதிப்பும் வராது. 5 நாட்கள் கழித்து நடவு செய்தால் இதுபோன்ற மாற்றங்கள் வரும் என்றார்.

அப்போது மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் குப்புசாமி, கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன், வேளாண்மை அலுவலர் விவேக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story