வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ராணுவவீரர் குடும்பத்துடன் தர்ணா - உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை


வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ராணுவவீரர் குடும்பத்துடன் தர்ணா - உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 18 Aug 2019 3:30 AM IST (Updated: 18 Aug 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ராணுவவீரர் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனைவி, 2 குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

வேலூர், 

குடியாத்தத்தை அடுத்த பரதராமியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் நேற்று காலை 11 மணியளவில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வேலூர் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள் சரவணக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், ‘எனது நிலத்தின் அருகே பிணத்தை கொண்டு செல்பவர்கள் நிலத்தின் முள்வேலி, பயிரை சேதப்படுத்துகிறார்கள். அதுகுறித்து கேட்டதற்கு குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறினார்.

இதையடுத்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள், சரவணக்குமாரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தாட்சாயிணியிடம் அழைத்து சென்றனர். அவரிடம், சரவணக்குமார் கோரிக்கை மனு அளித்தார். அதில், கூறியிருந்ததாவது:-

நான் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவவீரராக பணிபுரிந்து வருகிறேன். எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான நிலம் குடியாத்தத்தை அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ளது. நான் மற்றும் எனது சகோதரர்கள் அந்த நிலத்தில் மா, தென்னை மற்றும் பயிர்கள் வைத்து பராமரித்து வருகிறோம். கடந்த 2017-ம் ஆண்டு நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்தோம்.

அதே பகுதியை சேர்ந்த ஒருதரப்பினர் இறுதிசடங்கு ஊர்வலத்தின்போது எங்கள் நிலத்தின் அருகே செல்கின்றனர். அப்போது அவர்கள் எங்களது நிலத்தின் முள்வேலியை பிடுங்கி, பயிர்களை சேதப்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இறுதிசடங்கின்போது அவர்கள் இதேபோன்று செய்கிறார்கள். இதுகுறித்து கேட்டதற்கு எனக்கும், எனது சகோதரர்களின் குடும்பத்துக்கும் மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து பரதராமி போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நிலத்துக்கும், எங்கள் குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட தாட்சாயிணி இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். ராணுவவீரர் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story