புதுக்கோட்டை அருகே பரிதாபம் - மின்சாரம் தாக்கி சிறுமி சாவு
புதுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள செட்டிமல்லன்பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 37), கொத்தனார். இவருடைய மனைவி இசக்கியம்மாள் (27). இவர்களுக்கு முத்து நந்தினி (8), முத்து பாலஇலக்கியா (6) ஆகிய மகள்களும், முத்து நவநீதன் என்ற மகனும் உண்டு.
பேச்சிமுத்து வீட்டை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வீட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்காக இரும்பு வேலி வழியாக மின்சார ஒயர் இணைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு முத்து பாலஇலக்கியா விளையாடிக் கொண்டு இருந்தாள். அந்த பகுதியில் லேசான மழை பெய்து இருந்ததால், இரும்பு வேலி ஈரப்பதமாக இருந்தது. அதே நேரத்தில் ஆழ்துளை கிணற்றுக்காக வழங்கப்பட்ட மின்சார ஒயரில் இருந்தும் இரும்பு வேலிக்கு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
இதனை அறியாத முத்து பாலஇலக்கியா ஓடி வந்து இரும்பு வேலியை பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட முத்து பாலஇலக்கியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தாள். சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story