குழித்துறையில் 2 ராணுவ வீரர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு


குழித்துறையில் 2 ராணுவ வீரர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 17 Aug 2019 11:00 PM GMT (Updated: 17 Aug 2019 8:36 PM GMT)

குழித்துறையில் 2 ராணுவ வீரர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் நேற்று திரளாக வந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்த அருண் மற்றும் அவருடைய நண்பர் ஜோசப் சாண்டின் ஆகியோர் கடந்த 16-ந் தேதி இரவு குழித்துறை போலீஸ் நிலையம் சென்றனர். இவர்கள் 2 பேரும் ராணுவ வீரர்கள். பின்னர் அவர்களுடைய நண்பர் சஜின் என்பவருக்கு ஏற்பட்ட விபத்து தொடர்பான எம்.ஐ.ஆர். நகலை கேட்டனர். ஆனால் அப்போது போலீசார் அவர்களை தகாத வார்த்தைகள் பேசியதோடு ராணுவத்தை அசிங்கப்படுத்தும் விதமாகவும் பேசி உள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை

மேலும் 2 பேரையும் தாக்கி இருக்கிறார்கள். தாக்கப்பட்ட சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். ஜோசப் சாண்டின் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் நகை மற்றும் அடையாள அட்டையையும், அருணிடம் இருந்து ½ பவுன் மோதிரத்தையும் பறித்துள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரும் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே அருண் மற்றும் ஜோசப் சாண்டினை தாக்கிய போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story