கடன் உதவி பெற பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிக்கை


கடன் உதவி பெற பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிக்கை
x
தினத்தந்தி 18 Aug 2019 4:15 AM IST (Updated: 18 Aug 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் குறைந்த வட்டியில் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாது:-

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிக பட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை ஆகும். பெண்களுக்காக புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவை சேர்ந்த மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு 4 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.15லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. இதற்கு சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தி செய்து மகளிர் திட்டம் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிக பட்ச கடன் தொகையாக ரூ.1லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிக பட்ச கடன் தொகை ரூ.15லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. கறவை மாடுகள் வாங்க 6 சதவீத வட்டியில் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் கடன் பெற விரும்புபவர்கள். பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story