அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் - ஜி.கே.வாசன் பேட்டி


அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் - ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 18 Aug 2019 4:45 AM IST (Updated: 18 Aug 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

வருகிற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் என மதுரையில் ஜி.கே.வாசன் கூறினார்.

மதுரை,

மதுரை விரகனூரில் உள்ள ஒரு மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு நடைபெற்றது. கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கினார்.

உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார். இந்த மாநாட்டில் மதுரை, நெல்லை, குமரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

நடைபெற இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் நிர்வாகிகள் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடைபெற்றது. கட்சியை பலப்படுத்த இயக்கத்தின் அடித்தளத்தில் செயல்படக்கூடியவர்கள் தொண்டர்கள். அவர்களுடைய கருத்துகளை கேட்பதற்கான மாநாடு தான் இது.

இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட்டார, நகர, பேரூர் தலைவர்கள் கலந்துகொண்டனர். வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும். அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி கட்சிகளோடு இணைந்து 100 சதவீத வெற்றியை பெற போராடுவோம். மேலும், எங்கள் களப்பணியையும், வியூகத்தையும் சிறப்பாக அமைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக த.மா.கா.வின் அரசியல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

டெல்லியில் சுதந்திர தின கொடியேற்று விழாவில் பேசிய பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டியதற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். நதிநீர் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். ஜம்மு-காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவு, 35ஏ பிரிவையும் நீக்கி 2 யூனியன் பிரதேசங்களாக அறிவித்ததை த.மா.கா. வரவேற்கிறது.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை வரவேற்கிறோம். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கட்சி நிர்வாகிகள் இப்போது இருந்தே தயாராக வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருகிற நீர்வரத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக, பாலாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம், முல்லை பெரியாறு அணையை பொறுத்து ஏற்படுகின்ற பிரச்சினைகள், சுப்ரீம் கோர்ட்டு கூறிய பிறகும் தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதில் கர்நாடக அரசின் பிடிவாதம் இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கு மத்திய அரசோடு பேசி தென்மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் கூட்டத்தை மத்திய அரசின் தலைமையில் கூட்டி நிரந்தர தீர்வு காண தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story