மதுரையில் டீக்கடைக்காரர் குத்திக்கொலை; குடித்த டீக்கு காசு கேட்டதால் 5 பேர் கும்பல் வெறிச்செயல்


மதுரையில் டீக்கடைக்காரர் குத்திக்கொலை; குடித்த டீக்கு காசு கேட்டதால் 5 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 18 Aug 2019 12:15 AM GMT (Updated: 17 Aug 2019 11:04 PM GMT)

குடித்த டீக்கு காசு கேட்டதால் மதுரையில் டீக்கடைக்காரர் ஒருவர் 5 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 42). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். நேற்று காலை 5.30 மணிக்கு இவர் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, 5 பேர் கும்பலாக வந்து கடையில் டீக்குடித்தனர். பின்னர் அவர்கள் காசு கொடுக்காமல் அங்கிருந்து நகர்ந்தனர். உடனே மாரிமுத்து டீ குடித்ததற்கு காசு கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

உடனே அவர்கள், “பணம் கொடுக்க முடியாது” என்று கூறி தகராறு செய்தனர். மேலும் அந்த கும்பல் ஆத்திரம் அடைந்து, அங்கிருந்து பொருட்களை அடித்து நொறுக்கி அந்த கடையை சூறையாடியது.

அங்கிருந்த பாட்டிலை எடுத்து மாரிமுத்து தலையில் தாக்கியதுடன், கத்தியால் அவரது கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாரிமுத்துவை, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாரிமுத்துவின் உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்பாண்டி, அருண்குமார், பிரசாத், வீரகார்த்திக், காவேரிமணி ஆகிய 5 பேரும் அடிக்கடி, மாரிமுத்துவின் கடையின் முன்பு அமர்ந்து இருப்பார்களாம். ஒரு சில நேரம் அந்த கும்பல் கஞ்சா போதையில் வந்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தகராறு செய்துள்ளனர். எனவே அவர்களை கடை முன்பு உட்காரக்கூடாது என்று மாரிமுத்துவும், அவருடைய மனைவியும் சத்தம் போட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலையில் மாரிமுத்துவுக்கும், அந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே கடையில் இருந்து செல்லுமாறு அவர் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் நேற்று காலை மீண்டும் வந்து தகராறு செய்துள்ளது. பின்னர் கத்தியால் மாரிமுத்துவை குத்தியது விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அந்த கும்பலை தேடி வந்தனர்.

இதில் ஆத்திக்குளம் பகுதியில் பதுங்கி இருந்த வீரகார்த்திக், அருண்குமார் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவுக்கு முத்துமகாராஜன்(18) என்ற மகனும், முத்துமகாராசி (15) என்ற மகளும் உள்ளனர்.

கொலை நடந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறும் போது, “மாரிமுத்து டீக்கடை அமைந்துள்ள பகுதியில் நின்று சில இளைஞர்கள் அந்த வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை கேலி கிண்டல் செய்கிறார்கள். எனவே போலீசார் அடிக்கடி கிருஷ்ணாபுரம்காலனி பகுதியில் ரோந்து சென்று, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story