சட்டசபை தேர்தலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்குமா?


சட்டசபை தேர்தலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்குமா?
x
தினத்தந்தி 18 Aug 2019 12:00 AM GMT (Updated: 18 Aug 2019 12:00 AM GMT)

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்குவது குறித்து மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில் மாநில பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மூத்த தலைவர் வினய் சகஸ்ரபூதே, மராட்டியத்துக்கான தேர்தல் பொறுப்பாளர் புபேந்திர யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு குறித்தும், மக்கள் மத்தியில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கொடுத்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கடந்த 1-ந் தேதி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரத யாத்திரையை தொடங்கினார். மேற்கு மராட்டியத்தில் கொட்டித்தீர்த்த கன மழையால் அவர் கடந்த 6-ந் தேதி தனது ரத யாத்திரையை தற்காலிகமாக ரத்து செய்து வெள்ள மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.

இந்த நிலையில் தற்போது நிலைமை சீரடைந்துள்ளதை அடுத்து வரும் 21-ந் தேதி அவர் தனது ரத யாத்திரையை மீண்டும் தொடர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Next Story