குப்பைகளை தரம் பிரித்து வழங்க கவுன்சிலர்களின் ஒத்துழைப்பு அவசியம்; பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் சுபாஷ் பி.ஆடி பேச்சு
குப்பைகளை தரம் பிரித்து வழங்க கவுன்சிலர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் சுபாஷ் பி.ஆடி கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. மேயர் கங்காம்பிகே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை மேயர் பத்ரேகவுடா, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், கவுன்சிலர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஓய்வு பெற்ற உப லோக்ஆயுக்தா நீதிபதியும், கர்நாடக திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழு மாநில தலைவருமான சுபாஷ் பி.ஆடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வடஇந்தியாவில் திடக்கழிவு மேலாண்மையை கண்காணிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு குழு அமைத்தது. அதன்பிறகு ஒவ்வொரு மாநிலத்துக்கும் குழு அமைக்கப்பட்டது. கர்நாடக திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழு தலைவராக என்னை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்தது. மாநிலத்தில் தினமும் 12 ஆயிரம் டன் குப்பைகள் சேர்கின்றன. குறிப்பாக பெங்களூருவில் தினமும் 6 ஆயிரம் டன் குப்பைகள் சேர்கின்றன. இதில் 40 சதவீத குப்பைகள் மட்டும் தரம் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 60 சதவீத குப்பைகள் தரம் பிரிக்கப்படுவது இல்லை. இந்த குப்பைகளை அப்புறப்படுத்துவது என்பது பெரும் சவாலாகும்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி குப்பைகளை கொட்டும்போது உலர் குப்பை, உலரா குப்பை என்று பிரிக்க வேண்டும். இதை பலர் செய்வது இல்லை. இதனால் குப்பைகளை அப்புறப்படுத்துவது என்பது பெரும் சவாலாகும். எனவே, ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் தங்களின் வார்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் வலியுறுத்த வேண்டியது அவசியம். அதிகாரிகளை கொண்டும், மார்ஷல்களை கொண்டும் கண்காணிக்க வேண்டும். வார்டு உறுப்பினர்களின் (கவுன்சிலர்கள்) ஒத்துழைப்பு இருந்தால் மட்டும் தான் பெங்களூருவில் குப்பை பிரச்சினையை சுலபமாக தீர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story