பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் குழாய்களை சாலை ஓரங்களில் அமைக்கக்கோரி கையெழுத்து இயக்கம்; அ.கணேசமூர்த்தி எம்.பி. தொடங்கி வைத்தார்


பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் குழாய்களை சாலை ஓரங்களில் அமைக்கக்கோரி கையெழுத்து இயக்கம்; அ.கணேசமூர்த்தி எம்.பி. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Aug 2019 10:45 PM GMT (Updated: 18 Aug 2019 5:22 PM GMT)

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் பதிக்கப்படும் எண்ணெய் குழாய்களை சாலை ஓரங்களில் அமைக்கக்கோரி சென்னிமலை அருகே கையெழுத்து இயக்கத்தை ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. தொடங்கி வைத்தார்.

சென்னிமலை,

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் தேவணகொந்தி வரை சுமார் 312 கிலோ மீட்டர் தூரத்துக்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த திட்டத்தை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஊர்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், விவசாய நிலங்கள் வழியாக குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் சென்னிமலை அருகே உப்பிலிபாளையம் கிராமத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு முருங்கத்தொழுவு ஊராட்சி முன்னாள் தலைவர் மு.ரவி தலைமை தாங்கினார். கி.வே.பொன்னையன் (தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர்), எஸ்.பொன்னுசாமி (இந்திய கம்யூனிஸ்டு), அ.செ.கந்தசாமி (லஞ்ச, ஊழல் எதிர்ப்பு இயக்கம்), அ.செல்வராசு (புரட்சிகர விவசாய தொழிலாளர் முன்னணி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், ‘தமிழகத்தில் கெயில் திட்டம் வந்த போது அதனை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று கொண்ட அவர் உடனடியாக சாலை ஓரங்களில் மட்டுமே குழாய்கள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல் தற்போதைய முதல்- அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எண்ணெய் குழாயை சாலை ஓரங்களில் மட்டுமே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

இதில், ஒருங்கிணைப்பாளர்கள் ஒட்டவலசு பாலு, பசுவபட்டி பெரியசாமி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story