குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை தூர்வார கூடுதலாக 200 பொக்லின் எந்திரங்கள் வரவழைக்க நடவடிக்கை


குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை தூர்வார கூடுதலாக 200 பொக்லின் எந்திரங்கள் வரவழைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Aug 2019 4:15 AM IST (Updated: 19 Aug 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை தூர்வார கூடுதலாக 200 பொக்லின் எந்திரங்கள் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் தொடர்பாக அலுவலர்கள், விவசாயிகளுடனான கலந்தாய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரும், குடிமராமத்து பணிகள் சிறப்பு அலுவலரு மான பாலாஜி தலைமை தாங்கினார். கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் பாலாஜி பேசும் போது கூறியதாவது:-

200 பொக்லின் எந்திரம்

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா பகுதிகளில் சுமார் ரூ.60 கோடி மதிப்பீட்்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 250 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதன் அடிப்படையில் மிகவும் அவசியமான பணிகளுக்கு முக்கியத்துவம் தருவதுடன், அந்த பணிகள் 10 நாட்களில் முடிக்கப்படும்.

இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து நாகை மாவட்டத்திற்கு 180 பொக்லின் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் தூர்வாரும் பணிக்காக கூடுதலாக 200 பொக்லின் எந்திரங்கள் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் பணிகள் முடிக்கப்படும்.

100 சதவீதம்

கடந்த ஆண்டில் வெள்ளம் வந்தபோது ஏற்பட்ட சிரமங் களை தவிர்க்கும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் விவசாயிகள் நேரடியாக பார்வையிட்டு, பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் போதே ஏதெனும் குறைகள் இருப்பின் மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். தற்போது எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள 29 பணிகளில் தண்ணீர் வரத்துக் கால்வாய்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிகள் எந்தவொரு குறைபாடும் இன்றி 100 சதவீதம் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

அனைத்து விவசாயிகளும் இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்தால் தான் அரசின் நோக்கம் நிறைவேறும். இவ்வாறு அவர் பேசினார். இதில் கஜாபுயல் மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு கூடுதல் திட்ட இயக்குனர் பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, உதவி கலெக்டர் கமல் கிஷோர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் கண்மணி, இணை இயக்குநர் (வேளாண்மை) நாராயணசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story