சென்னையில் அரசு பள்ளிகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் குமரி அனந்தன், காமராஜரின் பேத்தி பங்கேற்பு


சென்னையில் அரசு பள்ளிகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் குமரி அனந்தன், காமராஜரின் பேத்தி பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Aug 2019 10:45 PM GMT (Updated: 18 Aug 2019 7:42 PM GMT)

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று காமராஜரின் கல்வி மேம்பாட்டு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

அரசு பள்ளிகளை மூடவோ, நூலகமாகவோ தமிழக அரசு மாற்றக்கூடாது. நடத்த முடியாத பள்ளிகளை அந்தந்த கிராம மக்கள் தத்தெடுக்க வழிவகை செய்யவேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று காமராஜரின் கல்வி மேம்பாட்டு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமை தாங்கினார். காமராஜரின் பேத்தியும், காமராஜரின் கல்வி மேம்பாட்டு மையத்தின் தலைவருமான வி.எஸ்.கமலிகா காமராஜர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது குமரி அனந்தன் பேசும்போது, ‘காமராஜரால் தொடங்கப்பட்ட பள்ளிகள் மூடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, அங்கு நூலகங்களை அரசு திறக்கவேண்டும்’ என்றார்.

வி.எஸ்.கமலிகா காமராஜர் நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கைகளை ஏற்று பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிடவேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்டமாக பள்ளி கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு, பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், பனங்காட்டு நாடார் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் வேணுகோபால், காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் தலைவர் சிலம்பு சுரேஷ், காமராஜரின் கல்வி மேம்பாட்டு மையத்தின் செயலாளர் ஜே.ஸ்டார்வின் ஜெனிப்பர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story