திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 38 பேர் கைது; ரூ.1¾ லட்சம், 28 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 38 பேர் கைது; ரூ.1¾ லட்சம், 28 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:15 AM IST (Updated: 19 Aug 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1¾ லட்சம் மற்றும் 28 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ஒருசில பொழுதுபோக்கு விடுதிகள் அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாகவும், சில இடங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகவும் மாநகர போலீசாருக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் அவ்வப்போது பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் காலேஜ் ரோடு அணைபாளையம் அருகே உள்ள குபேர லட்சுமி கிளப் என்ற மனமகிழ் மன்றத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் (பொறுப்பு) தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட கிளப்பிற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு பெரிய கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றது. ஆனால் போலீசார் அவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் கிளப் உரிமையாளரான மருதாச்சலம் என்கிற சின்ராஜ் (வயது 38) உள்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பணம் மற்றும் 28 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், அனுமதி இல்லாமல் கிளப் நடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தெரிவித்தார். திருப்பூரில் மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story