கரூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம்வகுப்பு மாணவர் சாவு


கரூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம்வகுப்பு மாணவர் சாவு
x
தினத்தந்தி 18 Aug 2019 10:45 PM GMT (Updated: 18 Aug 2019 7:49 PM GMT)

கரூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம்வகுப்பு மாணவர் சாவு நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம்.

கரூர்,

கரூர் திருமாநிலையூர் முதல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் பிரகதீஸ்வரன் (வயது 14). இவர் அப்பகுதியிலுள்ள குமரன் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் பிரகதீஸ்வரன் தனது நண்பர்களுடன் அங்குள்ள விவசாய கிணற்றில் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பிரகதீஸ்வரன் கிணற்றுக்குள் தவறி விழுந்து, நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடன் மீன்பிடிக்க சென்ற சக நண்பர்கள் இது பற்றி ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், மிதக்கும் டியூப்புகளை கிணற்றில் போட்டு அதன் மூலம் பிரகதீஷ்வரனை தேடினர். அந்த கிணற்றில் குப்பை நிரம்பி கிடந்ததால் பிரகதீஷ்வரனை தேடுவதில் தீயணைப்பு வீரர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனினும் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பிரகதீஸ்வரன் பிணமாக மீட்கப்பட்டார். இதைபார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

பின்னர் தாந்தோன்றிமலை போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அம்மையப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story