சமயபுரத்தில் மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது


சமயபுரத்தில் மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Aug 2019 11:15 PM GMT (Updated: 18 Aug 2019 8:09 PM GMT)

சமயபுரத்தில் மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சமயபுரம்,

சமயபுரம் அருகே உள்ள உப்பாற்றில் நள்ளிரவில் வாகனங்களில் மணலை அள்ளி கடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை உப்பாற்றில் ஒரு கும்பல் மணல் அள்ளுவதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் தனிப்படை போலீஸ்காரர்கள் சரவணக்குமார், விஜயகுமார், நல்லேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது, உப்பாற்றில் ஒரு டிராக்டரில் 3 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். உடனே போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றிவளைத்தனர். இதை எதிர்பார்க்காத அவர்கள், திடீரென போலீசாரை தாக்கி விட்டு, டிராக்டரில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது, அவர்களை பிடிக்க போலீஸ்காரர் சரவணக்குமார் முயன்றார்.

டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி

ஆனால் அவர்கள், அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றனர். இதில் போலீஸ்காரர் சரவணக்குமாரின் 2 கால்களிலும் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசாரும் அவர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். மேலும் டிராக்டரையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவந்தனர்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், புரத்தாக்குடி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த ஆல்பர்ட்(வயது 58), அவருடைய மகன் ஹென்றி புஷ்பராஜ் (26) மற்றும் டேனியல் சேவியர் குமார்(32) என தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தந்தை-மகன் உள்பட 3 பேர் மீதும் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது

பின்னர் தந்தை மகன் உள்பட 3 பேரையும் கைது செய்து, திருச்சி ஜே.எம்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் சரவணக்குமார் இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story