ஆம்பூர் பகுதியை புரட்டிப்போட்ட மழை: 2 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது - பொதுமக்கள் சாலை மறியல்


ஆம்பூர் பகுதியை புரட்டிப்போட்ட மழை: 2 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது - பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Aug 2019 3:30 AM IST (Updated: 19 Aug 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் 2 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆம்பூர், 

ஆம்பூர் தாலுகா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழை வேலூரையே புரட்டிப்போட்டது. கானல் நீராக தெரிந்த சாலைகளெல்லாம் வெள்ளக்காடாக மாறி வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆம்பூர் பகுதியில் 2-வது நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்து கொண்டே உள்ளது.

நகரில் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதிக்கு செல்லும் ரெயில்வே குகைப்பாதையில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் செல்வதால் அவ்வழியாக செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

மேலும் அங்கிருந்து வரும் மழைநீர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர். பொழுது விடிந்தபின்னரும் இருள் விலகாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்து சென்றனர். வெள்ளம் காரணமாக ரெட்டித்தோப்பு பகுதிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியே தனித்தீவு போல் மாறியது.

ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை, வெள்ளக்கல் மற்றும் காமனூர்தட்டு, பெரியாங்குப்பம், நாச்சார்குப்பம் அய்யனூர், மாதகடப்பா ஆகிய பகுதிகளில் கொட்டிய பலத்தமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கானாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

ஆனால் கானாறு பகுதிகளில் சரிவர தூர்வாரப்படாத காரணத்தால் கானாறுகளில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வேர்க்கடலை, சாமை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

காட்டாறு ஓடைகளில் பெருக்கெடுத்த தண்ணீர் கானாற்றில் கலந்ததால் விண்ணமங்கலம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீரோடு, சேர்ந்து மழைநீரும் புகுந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது.

குறிப்பாக கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. அதனை சீரமைக்காத காரணத்தால்தான் கானாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளதாகவும், அதிகாரிகள் அலட்சிய போக்கே காரணம் என கூறி 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொட்டும் மழையில் கையில் குடைகளுடன் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் வருவாய்த்துறையினரும், போலீசாரும் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் கால்வாயை சீரமைக்கும் வரை இங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பின்னர் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஊட்டல் தேவஸ்தானத்தில் இருந்து வரும் கானாற்று வெள்ளம் குட்டகிந்தூர், கீழ்மிட்டாளம் பெரியவரிகம் வழியாக செல்லும் கானாறு தூர்ந்து போனதால் பெரியவரிகம், கீழ்மிட்டாளம் ஆகிய பகுதியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பெரியவரிகம் கிராமத்தின் முக்கிய தெரு வழியாக இந்த கானாற்று வெள்ளம் சுமார் 4 அடி உயரத்திற்கு கரைபுரண்டு வருவதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வழியின்றி வீட்டுக்குள் முடங்கினர். மேலும் அப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

கானாற்று வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலையில் இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து பார்வையிடவில்லை. இதனால் அப்பகுதி இளைஞர்கள் ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உமராபாத் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

கானாற்று வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை மூழ்கடித்து, ஆலாங்குப்பம் பகுதி வழியாக புகுந்து பாலாற்றில் சேர்ந்தது. இதேபோல் மின்னூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மின்னூர், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம் ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடி பாலாற்றில் ஒன்று சேர்ந்தது. இதனால் ஆம்பூர் பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளம் வர ஆரம்பித்துள்ளது.

மேலும் மிட்டாளம் ஊராட்சி ஊட்டல் தேவஸ்தானம் வனப்பகுதியில் துருகம் காப்புக்காடுகளில் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக அப்பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கானாற்று வெள்ளம் அப்பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்ததோடு மட்டுமில்லாமல் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர், வேர்க்கடலை ஆகியவை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள சாணிக்கணவாய், பைரப்பள்ளி ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பாக கட்டப்பட்டு இருந்த சிறுதடுப்பணைகள் கானாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதேபோல் கைலாசகிரி பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடிந்து விழுந்தது. மேலும் கைலாசகிரி மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த அம்மா பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அங்குள்ள அறிவொளி நகரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மாச்சாம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. பள்ளிக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்தது. இதேபோல் கரும்பூர், வீராங்குப்பம், மேல்சாணாங்குப்பம், வடச்சேரி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மணியாரகுப்பம் பகுதியில் பெய்த மழையால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆம்பூர் தாலுகா பகுதி முழுவதும் தொடர்மழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அ.செ.வில்வநாதன் எம்.எல்.ஏ. கட்சி தொண்டர்களுடன் மழையில் நனைந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உணவு பொருட்கள் வழங்கினார்.

இதேபோல் வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, மாதனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக பாதிப்புகள் இருந்தாலும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வெப்பத்தின் காரணமாக அவதிப்பட்ட பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க இப்போதே மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story