வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை: ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம்


வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை: ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம்
x
தினத்தந்தி 19 Aug 2019 3:00 AM IST (Updated: 19 Aug 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக தெருக்கள், சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. நகரில் உள்ள கால்வாய்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து நிரம்பி வழிந்தது.

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குண்டு, குழி பள்ளங்களில் குளம்போல் வெள்ளம் தேங்கி நின்றது. அதிகாலை தொடர்ந்து 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சுமார் 10 சென்டிமீட்டர் வரை மழையளவு பதிவானது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டது. அண்ணாநகர், கலைஞர்நகர், சக்திநகர், சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மைதானம், அரசு பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் தேங்கி நின்றது. மார்க்கெட் பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. பல இடங்களில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் காய்கறி மார்க்கெட்டிற்கு வந்த விவசாயிகள், பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

திருப்பத்தூர் அருகே ஏலகிரிமலை அடிவார பகுதியில் உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. அங்குள்ள விநாயகர் கோவில் வரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த நீரானது அருகில் உள்ள ஏரிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. ஏரிக்கால்வாய்களின் நீர்வரத்து பகுதிகள் அனைத்திலும் இருந்து வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. எனவே ஏரிகள் நிரம்பும் வாய்ப்புள்ளது. அதேபோல், பொம்மிகுப்பத்தை அடுத்த ஏழருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

திருப்பத்தூர் டி.எம்.சி. காலனியில் உள்ள வீடுகளில் பூமிக்கு அடியில் இருந்து நீரூற்று பொங்கி வந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றது. வீடுகள் இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வீட்டை காலி செய்து, அருகில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.

தகவல் அறிந்ததும் நகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு சென்று, மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை அகற்றினர்.

எலவம்பட்டி கிராமத்தில் மின்கம்பம் சாய்ந்தது. உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகளவு வந்து கொண்டிருக்கிறது. ஒரு சில ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. சில ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதன்காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆம்பூர் அருகே உள்ள ஊட்டல் வனப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

மிட்டாளம் அருகே உள்ள மேல்மிட்டாளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கோழிப்பண்ணையில் கானாற்று வெள்ளம் புகுந்தது. இதனால் கோழிப்பண்ணையில் இருந்த 1,000 கோழிகள் பரிதாபமாக இறந்தது.

பேரணாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூரில் அரசு உயர்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பள்ளிக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் அப்பகுதியில் விவசாய நிலங்களிலும் மழைநீர் புகுந்தது.

பேரணாம்பட்டு பகுதியில் நேற்று அதிகாலை 4 மணி முதல் பகல் 2 மணி வரை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் பேரணாம்பட்டு அருகே உள்ள மதினாபல்லி மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதேபோல் சேராங்கல், ரங்கம்பேட்டை வனப்பகுதிக்குள் பலத்த மழை பெய்து வருவதால் சேராங்கல், ரங்கம்பேட்டை கானாற்றிலும் வெள்ளம் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆம்பூர் அருகே உள்ள பெரியவரிகம், சின்னவரிகம் பகுதியில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், வீடுகள் சேதமடைந்ததையும் காத்தவராயன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

குடியாத்தம் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை தொடங்கிய மழை மாலை வரை விடாமல் பெய்தது. இதன் காரணமாக குடியாத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து ஓடியது. ஆர்.எஸ்.நகர், தரணம்பேட்டை, எம்.பி.எஸ்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. நகராட்சி பணியாளர்கள் விரைந்து சென்று நீர் வெளியேற நடவடிக்கை எடுத்தனர்.

மேல்ஆலத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் சாந்தி, வருவாய்த்துறையினர் விரைந்து சென்று தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

வாணியம்பாடி, ஆலங்காயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று பலத்த மழை கொட்டியது. நேற்று காலை 8 மணி வரை வேலூர் மாவட்டத்திலேயே ஆலங்காயத்தில் அதிகபட்சமாக 150.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆலங்காயம் அருகே உள்ள பெரிய ஏரி நிரம்பியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாணியம்பாடியை அடுத்த ஆவாரங்குப்பம் பகுதியில் பாலாறு - மண்ணாறு இணைக்கும் பகுதியில் காட்டாற்று வெள்ளம் மண்ணாற்றில் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்ந்து மழை பெய்ததால் வாணியம்பாடி நகரம் மற்றும் கிராம பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வீட்டிற்குள் நுழைந்ததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். நகர பகுதியில் பெருமளவு இடங்களில் மழைநீர் தெருக்களில் வெள்ளம் போல் ஓடியது. வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதியில் சாரதம்மாள் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு இடிந்து விழுந்தது.

இதேபோல வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர் உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

Next Story