அரியமங்கலம் குப்பை கிடங்கு இந்தியாவிலேயே பெரிய பூங்காவாக விரைவில் மாற்றப்படும் அமைச்சர் பேச்சு


அரியமங்கலம் குப்பை கிடங்கு இந்தியாவிலேயே பெரிய பூங்காவாக விரைவில் மாற்றப்படும் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 19 Aug 2019 4:30 AM IST (Updated: 19 Aug 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

அரியமங்கலம் குப்பை கிடங்கு இந்தியாவிலேயே பெரிய பூங்காவாக விரைவில் மாற்றப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி சார்பில் இனி ஒரு விதி செய்வோம், இல்லந்தோறும் உரம் செய்வோம் என்ற திட்டம் கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் திருச்சி நகரில் உள்ள 365 பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். 7,979 மாணவ- மாணவிகள் நேரடியாக பங்கேற்று வீடுகளில் விஞ்ஞான முறையில் உரம் தயாரிக்க பெற்றோருக்கு உதவினர். இவர்களில் முதல் பரிசான தலா ரூ.5 ஆயிரத்து 500 மதிப்புள்ள சைக்கிள்களை பெற 200 மாணவர்களும், இரண்டாம் பரிசான தலா ரூ.1,500 மதிப்புள்ள கைக்கடிகாரம் பெற 224 மாணவர்களும், 253 மாணவர்கள் தலா ரூ.750 மதிப்புள்ள ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியும் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று மாலை திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர பொறியாளர் அமுதவள்ளி வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்கள்.

விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

நடுநாயகமான நகரம்

திருச்சி தமிழகத்தின் நடுநாயகமான நகரம். அதனால் தான் இதனை தலைநகரமாக மாற்றுவதற்கு மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆசைப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளில் திருச்சி நகரம் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு காரணம் திருச்சி மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் தான். பழைய திருச்சியை நவீன திருச்சியாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டாண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் பொலிவுறு நகரம், பாதாள சாக்கடை இணைப்பு திட்டம், குடிநீர் திட்ட பணிகள் முடிக்கப்படும். பாதாள சாக்கடை பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்ததும் அனைத்து சாலைகளும் போடப்பட்டு திருச்சி மிக அழகான நகரமாக மாறும்.

அரியமங்கலம் குப்பை கிடங்கை பூங்காவாக மாற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில், இந்த பணி முடிவடைந்தால் சுமார் 50 ஏக்கரில் இந்தியாவிலேயே பெரிய பூங்காவாக அது விளங்கும். வெளிநாடுகளில் பார்த்து ரசிக்க வேண்டிய அனைத்து காட்சிகளையும் திருச்சியில் கண்டு களிக்க முடியும். மாநகராட்சியின் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தயாநிதி நன்றி கூறினார். உதவி ஆணையர்(கணக்கு) திருஞானம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கு உதவுவதற்காக வருபவர்கள் தங்குவதற்காக ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட விடுதி கட்டிடம், ஸ்ரீரங்கம் கோட்டம் பாபு சாலையில் ரூ.83 லட்சத்தில் உருவாக்கப்பட்ட பூங்கா, அகிலாண்டேஸ்வரி நகரில் ரூ.55 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா, எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்று ஆகியவற்றையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.


Next Story