மகாதேவர் கோவில் கொள்ளை விவகாரம்: திக்குறிச்சியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம்


மகாதேவர் கோவில் கொள்ளை விவகாரம்: திக்குறிச்சியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 9:19 PM GMT)

திக்குறிச்சி மகாதேவர் கோவில் கொள்ளை விவகாரத்தில் இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மொட்டை அடித்து மாட்டிடம் மனு கொடுக்கப்பட்டது.

களியக்காவிளை,

குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயங்களில் 2-வது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி பூட்டை உடைத்த மர்ம கும்பல் அங்கிருந்த பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை உள்பட பல லட்சம் மதிப்பிலான சிலைகள் மற்றும் காணிக்கை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது.

இதுபற்றி மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

முன்னேற்றம் இல்லை

பழமை வாய்ந்த சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. எனினும் இந்த வழக்கில் தற்போது எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே, இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றக்கோரியும், கொள்ளையர்களை உடனே, கைது செய்யக்கோரியும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நூதன போராட்டம்

இந்தநிலையில், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நேற்று திக்குறிச்சியில் நூதன போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் மொட்டை அடித்து மாட்டிடம் மனு கொடுத்தார். திக்குறிச்சி மகாதேவர் கோவில் அருகே தாமிரபரணி ஆற்று பாலத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு இந்து முன்னணி மேல்புறம் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மிசாசோமன், முன்னாள் மாவட்ட தலைவர் குழிச்சல் செல்லன், வக்கீல் பிரிவு செயலாளர் ராஜேஷ், சிறப்பு விருந்தினராக மாநில இணை அமைப்பாளர் பொன்னையா மற்றும் பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story