ஜெயலலிதா 9 முறை சிந்தித்தால் எடப்பாடி பழனிசாமி 16 முறை சிந்திப்பார் பால் விலை உயர்வு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


ஜெயலலிதா 9 முறை சிந்தித்தால் எடப்பாடி பழனிசாமி 16 முறை சிந்திப்பார்  பால் விலை உயர்வு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 19 Aug 2019 5:45 AM IST (Updated: 19 Aug 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா 9 முறை சிந்தித்தால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 முறை சிந்திப்பார் என்று பால் விலை உயர்வு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

தமிழ் வளர்ச்சித் துறையின் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை 8-ம் ஆண்டு விழா, மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையால் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. கல்லூரி போட்டியில் மாவட்ட அளவில் முதல் மற்றும் 2-ம் பரிசுகளைப் பெறும் மாணவர்களுக்கும், பள்ளி போட்டியில் மாநில அளவில் முதல் 3 பரிசுகளைப் பெறும் மாணவர்களுக்கும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் ஒரு வார காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்படி கடந்த 2018-19-ம் ஆண்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (நேற்று) முதல் 24-ந் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் 202 மாணவர்களில் தமிழ் மொழியை முதன்மை பாடமாக படிக்காத பிறதுறை சார்ந்த மாணவர்கள் 90 சதவீதம் உள்ளனர். இவர்கள்தான் தமிழ் இலக்கியப் போட்டிகளில் ஆர்வமாகப் பற்கேற்று வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணை வேந்தர் கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மதுரை நான்காம் தமிழ்ச் சங்க தலைவர் குமரன் சேதுபதி, சென்னை உலக தமிழ்ச் சங்க இயக்கக இயக்குனர் முனைவர் விசயராகவன், மதுரை உலக தமிழ்ச்சங்க இயக்குனர் (பொறுப்பு) அன்புச்செழியன், சென்னை தமிழ் வளர்ச்சி இயக்கக துணை இயக்குனர் (நிர்வாகம்) தியாகராஜன், சென்னை மொழிபெயர்ப்பு துறை இயக்குனர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பால் விலை உயர்வு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், “எந்த முடிவு எடுத்தாலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல முறை சிந்தித்து தான் முடிவு எடுப்பார். ஜெயலலிதா 9 முறை சிந்தித்தால், எடப்பாடி பழனிசாமி 16 முறை சிந்திப்பார். எனவே பால் விலை உயர்வு என்ற இந்த முடிவு, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது” என்றார்.

Next Story