பால் விலை உயர்வை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
பால் விலை உயர்வை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
நாமக்கல்,
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விலையில்லாமல் அரிசி வழங்குவது போல், பாலும் விலையில்லாமல் கொடுத்தால் தமிழக மக்களுக்கு நாங்கள் செய்கின்ற உதவியாக, நன்றி கடனாக இருக்கும் என்று கூட ஆசைப்படுகின்றோம். ஆனால் அதற்கு பொருளாதாரம் இடம் தரவில்லை. பால் விவசாயிகளிடம் இருந்து பெறப்படுகிறது. பால் உற்பத்தி செய்ய விவசாயிகள் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார்கள், எந்த அளவிற்கு லாபம் பெறுகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். பருவகால மாற்றத்தில் புற்கள் கிடைக்க விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். புண்ணாக்கு, தீவனங்கள் வாங்க சிரமப்படுகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
தீவன விலை உயர்வை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்வை கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த விலை உயர்வு கூட காலதாமதமாக தான் பால் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கின்றோம். அதே நேரத்தில் பால் வழங்க கூடிய நிறுவனமும் நஷ்டத்தில் சென்று விடாமல், அதனையும் காப்பாற்றும் இடத்தில் அரசு இருக்கின்றது.
எனவே மிகப்பெரிய விலை உயர்வை அரசு ஏற்படுத்தவில்லை. உற்பத்தியாளரும், நுகர்வோரும் பாதிக்க கூடாது என்ற நோக்கத்தில் தான் முதல்-அமைச்சர் யோசித்து பால் விலையை உயர்த்தி உள்ளார். இந்த விலை உயர்வை அனைவரும் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கைத்தறி, பெடல் தறி, விசைத்தறி ஆகிய மூன்றும் சிறப்பாக செயல் படுத்தப்படுகிறது. இந்தாண்டு நெசவாளர்களுக்கு அகவிலைப்படி, 10 சதவீத கூலி உயர்வு, வட்டி மானியம் 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்வு என பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி உள்ளது.
நெசவாளர்களின் நலன் கருதி அரசு கைத்தறி ஆதரவு திட்டத்தை உருவாக்கி, அதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. தமிழக அரசு எடுத்த முயற்சியால் நெசவாளர்களுக்கு தற்போது ஆண்டுக்கு 9 மாதம் வேலை கிடைக்கிறது. மீதமுள்ள 3 மாதங்களும் அவர்களுக்கு வேலை வழங்க ஆலோசித்து வருகிறோம். கைத்தறி துணிக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அது 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதையும் தவிர்க்க வேண்டும். கைத்தறி துணிக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறோம். அதில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
Related Tags :
Next Story