அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்


அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
x
தினத்தந்தி 19 Aug 2019 5:15 AM IST (Updated: 19 Aug 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளதாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் சென்டாக் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கடந்த ஜூலை 27-ந் தேதி முதற்கட்ட கலந்தாய்வும், ஆகஸ்டு 12-ந் தேதி 2-ம் கட்ட கலந்தாய்வும் நடந்தது.

2 கட்டமாக நடைபெற்ற கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கை முடிந்து காலியாக உள்ள இடங்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 6 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 4 இடங்களும், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் 3 இடங்களும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் 5 இடங்களும் காலியாக உள்ளது.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பிம்ஸ் கல்லூரியில் 30 இடங்களும், மணக்குள விநாயகர் கல்லூரியில் 28 இடங்களும், வெங்கடேஸ்வரா கல்லூரியில் 21 இடங்களும் காலியாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 18 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 79 இடங்கள் என மொத்தம் 97 இடங்கள் காலியாக உள்ளது.

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு (மாப்-அப்) நாளை மறுநாள் (புதன் கிழமை) நடக்கிறது. அரசு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு காலை 9.30 மணிக்கு நடக்கிறது. நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு 10.30 மணிக்கு நடக்கிறது.

இந்த தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.

Next Story